குழந்தைகள் தொடர்பில் பெற்றோருக்கு முக்கிய அறிவிப்பு
தற்போது நிலவும் அதிக வெப்பமான வானிலை மற்றும் பாடசாலை விடுமுறை காலத்தைக் கருத்தில் கொண்டு பிள்ளைகளின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்து பெற்றோர்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
குறித்த விடயத்தை விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நாட்களில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக பிள்ளைகள் நீரிழப்பு நிலைக்கு உள்ளாகும் அதிக அபாயம் காணப்படுவதாக அவர் குறிப்பிடுகிறார்.
அதிக வெப்பம்
நீண்ட நேரம் அதிக வெயிலில் விளையாடுவதால் உடலுக்குக் கடுமையான பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதுடன், சில சந்தர்ப்பங்களில் அதிர்ச்சி நிலைகள் ஏற்படுவதுடன் இதயம் மற்றும் மூளைக்குக்கூட பாதிப்புகள் ஏற்படக்கூடும் என வைத்தியர் எச்சரிக்கிறார்.

தலைவலி, வாந்தி, உடல் வலி, மயக்க நிலை/தூக்கக் கலக்கம், அசௌகரியம், பசியின்மை மற்றும் சிறுநீர் அடர் நிறமாக மாறுதல் என்பன நீரிழப்பின் ஆரம்ப அறிகுறிகளாகும் என்பதால், வெளியில் விளையாடும் பிள்ளைகளுக்குப் போதுமான அளவு நீரைக் கொடுப்பது அத்தியாவசியமானதாகும்.
நீருக்கு மேலதிகமாகக் இளநீர், ஜீவனி, எலுமிச்சை, நாரத்தை, மாம்பழம், மாதுளைச் சாறு, கஞ்சி மற்றும் சூப் போன்ற இயற்கை திரவ உணவுகளைப் பிள்ளைகளுக்கு வழங்குவது முக்கியம் என அவர் சுட்டிக்காட்டுகிறார்.
விழிப்புடன் இருக்க வேண்டும்
சூரியன் உச்சிக்கு வரும் வேளைகளில் எளிய பருத்தி ஆடைகளை அணிவித்தல், தொப்பி பயன்படுத்துதல் மற்றும் மர நிழல் போன்ற குளிர்ந்த இடங்களில் ஓய்வெடுத்தல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என வைத்தியர் கூறுகிறார்.

இதேவேளை, விடுமுறை காலம் என்பதால் வீடுகளில் அதிக நேரம் தங்கியிருக்கும் பிள்ளைகள் குறித்துப் பெற்றோர்கள் இதைவிடவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா வலியுறுத்துகிறார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |