உக்ரைன் மீது படையெடுக்குமா ரஷ்யா? வெளிவந்த அறிவிப்பு
உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதற்கான எந்தவித திட்டமும் இல்லை என ரஷ்ய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷ்யா 1 இலட்சத்துக்கும் மேற்பட்ட படை வீரர்களை குவித்துள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
ரஷ்யா எந்த நேரத்திலும் வான்வழி குண்டுவீச்சுடன் படையெடுப்பை தொடங்கலாம் என அமெரிக்கா ஏற்கனவே எச்சரிக்கை விடுத்த நிலையில், அமெரிக்க அரச தலைவர் ஜோ பைடன், உக்ரைன் மீது ரஷ்யா அடுத்த சில நாட்களில் தாக்குதல் நடத்தலாம் என எச்சரிக்கை விடுத்தார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்த சிறிது நேரத்திலேயே, உக்ரைன் மீது தாக்குதல் நடத்த எந்தவித திட்டமும் இல்லை என்று ரஷ்ய வெளியுறவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
உக்ரைன் எல்லையில் நிலவும் பதட்டங்களுக்கு மத்தியில், ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் கிழக்கு ஐரோப்பாவில் பாதுகாப்பு உத்தரவாத முன்மொழிவுகள் குறித்து அமெரிக்காவிற்கு தனது பதிலை இன்று வெளியிட்டது.
அதில் நாட்டின் சில பகுதிகளில் இருந்து ரஷ்ய இராணுவத்தை திரும்பப் பெறுவதற்கான அழைப்புகள் "மிகவும் நியாயமற்றது" என்று அமைச்சகம் அறிக்கையில் தெளிவாகக் கூறியது. ரஷ்யாவின் எல்லைகளுக்கு அருகில் அமெரிக்கா மற்றும் நேட்டோவின் இராணுவ நடவடிக்கைகள் அதிகரித்து வருவதைப் பற்றி தங்கள் நாடு கவலை கொண்டுள்ளது என்றும், அதே நேரத்தில் நாட்டின் 'சிவப்புக் கோடுகள்' மற்றும் முக்கிய பாதுகாப்பு நலன்கள் மற்றும் அவற்றைப் பாதுகாப்பதற்கான அதன் இறையாண்மை உரிமை ஆகியவை தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றன என்றும் ரஷ்ய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
