கொள்கை வகுப்பில் தவறியது சிறிலங்கா - கஜேந்திரகுமார் வெளிப்படை
உள்நாட்டுக் கொள்கைகளின் நீடிப்பாகவே சிறிலங்காவின் வெளிவிவகாரக் கொள்கை அமைந்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தொிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில், சிறிலங்காவின் சிங்கள பௌத்த கொள்கையே , வெளிவிவகார கொள்கையிலும் செல்வாக்கு செலுத்துவதாக நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது அவர் சுட்டிக்காட்டினார். இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
“கொடூரம் என்னவென்றால் வெளிவிவகாரக் கொள்கையானது உள்நாட்டுக் கொள்கையின் நீட்சியாக காணப்படுகின்றது. சிறிலங்காவை எடுத்துக்கொண்டால், அதுவே யாதார்த்தமாக காணப்படுகின்றது.
சிறிலங்காவில் எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும், விதிவிலக்கின்றி அந்த அரசாங்கம் சிங்கள பௌத்த அடையாளத்தை நிலைநிறுத்தும் கொள்கையையே பின்பற்றி வருகிறது. சிங்கள பௌத்த மக்கள் மாத்திரமே இந்த நாட்டின் பிரஜைகளாக சிறிலங்கா அரசுகள் கருதுகின்றன.
சுதந்திரத்திற்கு முன்னரும் அதே நிலைமையே காணப்பட்டது. பிரித்தானியர்கள் வெளியேறி, சுதந்திரம் கிடைத்த பின்னர் சிறிலங்காவில் மிகத் துரிதமாக சிங்கள பௌத்த கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. அதன்காரணமாக, உள்நாட்டுக்குள்ளேயே எதிரிகள் உருவாக்கப்பட்டனர். தமிழர்கள் பிரதான இலக்காக்கப்பட்டனர். இன்று முஸ்லிம்களும் இலக்குவைக்கப்படுகின்றனர். கிறிஸ்தவர்கள் இலக்குவைக்கப்படுகின்றனர்.
கட்சி வேறுபாடுகள் இன்றி, சிங்கள பௌத்த கொள்கை பின்பற்றப்படுகின்றது. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அந்தக் கட்சி சிங்கள பௌத்த கொள்கையையே பின்பற்றுகின்றது. ஆகவேதான் கொள்கையில் கொடூரம் காணப்படுகின்றது.
இதன்பிரதிபலாக தென்னிந்தியாவில் உள்ள தமிழர்களைப் போன்று சிறிலங்காவிலும் தமிழர்கள் இருந்ததால், இந்தியா தொடர்பான கரிசனை சிறிலங்காவிற்கு ஏற்பட்டது.
சிறிலங்காவின் தமிழா்கள் தொடர்பில் இந்தியா அழுத்தம் கொடுத்தமையால், சிறிலங்காவின் பெரும்பாலானோர் சுதந்திரத்துக்கு பின்னர் இந்தியாவை எதிரியாகவே கருதினர்.
இந்த நிலைமைகளின் தொடர்ச்சியாக பனிப் போர் காலப் பகுதியில் ஜே.ஆர். ஜயவர்தன அமெரிக்காவுடன் நல்லுறவைப் பேண முயற்சித்தார். சோவியத் ஒன்றியத்துடன் நல்லுறவைப் பேணிவந்த இந்தியா, பின்னர் சிறிலங்கா மீதும் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது.
தற்போது காணப்படும் பூகோள அரசியல் போட்டி காரணமாக சர்வதேச நாடுகள் சிறிலங்காவில் ஆதிக்கம் செலுத்துகின்றன.
சீனா நோக்கியதாக சிறிலங்காவின் கொள்கைகள் காணப்படுவதால் பூகோள அரசியல் போட்டியின் நன்மைகளை சிறிலங்காவினால் பெற முடியாதுள்ளது. சீனா ஒருபக்கம், அமெரிக்கா, இந்தியா மறுபக்கம் இந்தப் போட்டியில் காணப்படுகின்றது.
இந்தப் பூகோள அரசியல் போட்டியை நாட்டின் நன்மைக்காக பெற்றுக்கொள்ள கூடியதாக மாற்றியிருக்க முடியும்.
உள்நாட்டு கொள்கையை மாற்றும் பட்சத்திலேயே அதனை சாத்தியமாக்க முடியும்.
பல்வகைமை கொண்ட நாடாகவும் வெவ்வேறு இனங்கள் இருப்பதை கொண்டாடியிருந்தால், பூகோள அரசியல் போட்டி எவ்வாறு இருந்தாலும் தற்போது எதிர்நோக்குவதை போன்று பின்னடைவான நிலைமைக்கு நாடு சென்றிருக்காது” என்றார்.