நல்லூர் ஆலய சூழலில் போலி நாணய புழக்கம்! ஒருவர் கைது
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய சூழலில் உள்ள கடைகளில் போலி ஆயிரம் ரூபாய் நாணயத் தாள்களினை வழங்கி பொருள்கள் வாங்கிய ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 2 ஆயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்களுடன், 3 கடைகளில் வழங்கிய 3 ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா தற்போது இடம்பெற்று வருகிறது.
ஆலய திருவிழாவின் முதல் மூன்று நாட்களில் மூன்று வெவ்வேறு கடைகளுக்குச் சென்ற ஒருவர், போலி ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்களை வழங்கி கச்சான், பழங்களை 200 ரூபாய்க்குள் வாங்கி மிகுதி பணத்தை பெற்றுச் சென்றுள்ளார்.
இவரின் நடத்தையில் சந்தேகம் அடைந்த சிலரால் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டன.
யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாடு
அவை தொடர்பில் யாழ்ப்பாணம் மூத்த காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் தலைமை காவல்துறை பரிசோதகர் நிகால் பிரான்சிஸ் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறை பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இதன்போது நல்லூரைச் சேர்ந்த 27 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் விசாரணைகளின் பின் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்.
சந்தேக நபருக்கு போலி நாணயத்தாள்களை அச்சிட்டு வழங்கியவர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக காவல்துறையினர் கூறினர்.
