காவல் நிலையத்தில் உயிரிழந்த குடும்பஸ்தர்...! உறவினர்கள் முறைப்பாடு - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
ஹோமாகம காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு காவல்துறை காவலில் இருந்த போது உயிரிழந்த குடும்பஸ்தரின் உறவினர் முறைப்பாடு ஒன்றை முன்வைத்துள்ளனர்.
இச் சம்பவத்துடன் தொடர்புடைய இரு காவல்துறை உத்தியோகத்தர்களையும் உடனடியாகக் கைது செய்யக் கோரி இந்த முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலுள்ள காவல்துறை தலைமையகத்தில் (Police Headquarters) குறித்த முறைப்பாட்டடை அவர்கள் பதிவு செய்துள்ளனர்.
இருவர் பணிநீக்கம்
மேலும் தெரியவருவதாவது,
சம்பந்தப்பட்ட காவல்துறை உத்தியோகத்தர்கள் இருவர் பணிநீக்கம் மட்டுமே செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் இதுவரை கைது செய்யப்படவோ அல்லது சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படவோ இல்லை எனவும் சுட்டிக்காட்டி, உயிரிழந்தவரின் மனைவி மற்றும் உறவினர்கள் இம்முறைப்பாட்டை முன்வைத்துள்ளனர்.
இது தொடர்பில் தெரிவித்த உயிரிழந்த குடும்பஸ்தரின் மனைவி, “என் கணவருக்கு நேர்ந்த கொடுமைக்கு நீதி கேட்டு காவல்துறை தலைமையகத்திற்கு வந்துள்ளோம்.

அவரைக் கொடூரமாகத் தாக்கிப் படுகொலை செய்த காவல்துறை அதிகாரிகள் பணி இடைநீக்கம் மட்டுமே செய்யப்பட்டுள்ளனர் கைது செய்யப்படவில்லை.
அவர்கள் மீது உடனடியாகச் சட்டப்படி கைது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
பிரேதப் பரிசோதனை அறிக்கையின்படி, குடும்பஸ்தரின் 3 விலா எலும்புகள் முறிந்துள்ளதாகவும், கழுத்து எலும்பு ஒன்று முறிந்துள்ளதாகவும், மூளையில் வீக்கமும் தலையில் இரத்தப்போக்கும் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொறுப்பான அதிகாரிகள்
இந்தநிலையில் குடும்பஸ்தர் உயிரிழந்து 48 மணித்தியாலங்களுக்கும் மேலாகியுள்ள போதிலும் இக் கொடூரத் தாக்குதலுக்குப் பொறுப்பான அதிகாரிகள் கைது செய்யப்படாமை குறித்து அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மிரிகான விசாரணைப் பிரிவைச் சேர்ந்த காவல்துறையினரின் உறவினர்களிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்த போதிலும் ஏன் அவர்களை கைது செய்யவில்லை என்பதற்கு திருப்திகரமான விளக்கத்தை அளிக்கவில்லை எனக் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் (HRCSL) இது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள போதிலும் அவர்களின் தற்போதைய பதில் அதிருப்தியளிப்பதாகக் குறிப்பிட்ட அவர்கள், நாளை காலைக்குள் காவல்துறையினர் கைது செய்யப்படாவிட்டால் போராட்டம் விரிவுபடுத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த குடும்பஸ்தருடன் கைது செய்யப்பட்டுத் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மதுஷங்க (Madhusanka) என்ற மற்றொரு இளைஞரும் காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டு ஆபத்தான நிலையில் இருப்பதாகக் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
அவரை உடனடியாகச் சட்ட மருத்துவ அதிகாரியிடம் (JMO) காண்பிக்க வேண்டும் அல்லது சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதித்துச் சிகிச்சை அளிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |