யாழில் சோகம் : பிள்ளைகளுக்கு உணவு வாங்கச் சென்ற குடும்பஸ்தர் விபத்தில் பலி
யாழ்ப்பாணத்தில் (Jaffna) பிள்ளைகளுக்கு உணவு வாங்கிச் சென்ற குடும்பஸ்தர் வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து சம்பவம் நேற்றைய தினம் (12.07.2025) இடம்பெற்றுள்ளது.
இலங்கைப் போக்குவரத்துச் சபையின் யாழ். சாலை காப்பாளரான நயினாதீவைச் சேர்ந்த 44 வயதான கி.பாலேஸ்வரன் என்பவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
கோப்பாய் காவல்துறை
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில், திருநெல்வேலி, பலாலி வீதியில் அமைந்துள்ள அம்மாச்சி உணவகத்தில் நேற்று மதியம் பிள்ளைகளுக்கு உணவு வாங்கிக் கொண்டு பலாலி வீதியில் சைக்கிளில் ஏற முற்பட்ட வேளை, வீதியில் மிக வேகமாக வந்த ஹயஸ் ரக வாகனம் அவர் மீது மோதியுள்ளது.
அதில் படுகாயமடைந்தவரை அங்கிருந்தவர்கள் மீட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் கோப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, உயிரிழந்தவரின் இரு பிள்ளைகள் பேராதனை மற்றும் ஶ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகங்களில் கல்வி கற்று வரும் நிலையில், இளைய மகள் அண்மையில் வெளியான சாதாரண தரப் பரீட்சையில் 9A பெறுபேறுகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
