உலகிலேயே அதிவேக இணைய வலையமைப்பினை அறிமுகப்படுத்திய நாடு இதுதான்!
உலகில் மிக வேகமான இணையத்தினை அறிமுகப்படுத்தி சீனா சாதனை படைத்துள்ளது.
ஒரு வினாடியில் 1.2 டெராபைட் (TB) வரையான தரவுப் பரிமாற்ற வீதத்தினைக் கொண்ட அதிவேக இணைய வலையமைப்பினையே சீனா அறிமுகப்படுத்தியுள்ளது, இது தற்போதுள்ள இணையங்களுடன் ஒப்பிடுகையில் 10 மடங்கு அதி வேகமாக காணப்படுகிறது.
சீனாவின் சிங்குவா பல்கலைக்கழகம், சைனா மொபைல், ஹுவாய் டெக்னாலஜிஸ் மற்றும் செர்னெட் கார்ப்பரேஷன் ஆகியவற்றின் கூட்டு முயற்சியின் விளைவாகவே இந்த புதிய அதிவேக இணையம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த திட்டத்திற்கு சூப்பர்ஃபாஸ்ட் லைன்(Super Fast Line) என பெயரிடப்பட்டிருப்பதாகவும் சவுத் சைனா மார்னிங் போஸ்ட் (South China Morning Post) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஐந்தாம் தலைமுறை
உலகின் பெரும்பாலான இணைய வலையமைப்புக்கள் வினாடிக்கு 100 ஜிகாபைட் (GB) வேகத்தில் இயங்குகின்றன, அண்மையில் அமெரிக்காவும் சமீபத்தில் தனது ஐந்தாம் தலைமுறை வலையமைப்பு மாற்றத்தை அறிமுகப்படுத்தியிருந்தது, இது வினாடிக்கு 400 ஜிகாபைட் (GB) வேகத்தில் இயங்குவதாக அமைந்துள்ளது.
அதன் படி பார்க்கையில் உலகிலேயே மிக வேகமான இணையத்தினை தற்போது சீனா அறிமுகப்படுத்தி சாதனை புரிந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
ஏறத்தாழ ஓராண்டு காலமாக இதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்து, இந்த அதிவேக இணையத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை இந்த ஆண்டு (2023) ஜூலை மாதம் 13 ஆம் திகதி சீனா வெளியிட்டிருந்தது.
வேகத்தை இன்னும் அதிகரித்து
தற்போது இந்த திட்டமானது சீனாவில் 3,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் வரை இணைக்கப்பட்டுள்ளது, அதன் படி, இந்த வலையமைப்பானது பீஜிங், வுஹான் மற்றும் குவாங்சோ போன்ற நகரங்களை வடங்களின் இணைப்புடன் இணைத்துள்ளது.
மேலும், இந்த வலையமைப்பினை எதிர்காலத்தில் இன்னும் விரிவுபடுத்துவது மாத்திரமன்றி, இதன் வேகத்தை இன்னும் அதிகரித்து நாடு முழுவதற்கும் விநியோகிப்பதே சீனாவின் இலக்கு எனவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |