ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்டவரின் தந்தை ஐ.நாவுக்கு வழங்கிய அறிக்கை... எச்சரிக்கும் சஜித்
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட இளைஞர் ஒருவரின் தந்தை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு அளித்த அறிக்கை, இலங்கைக்கு பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (23) உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “பாதிக்கப்பட்டவர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நீதியான விசாரணையை வேண்டி நின்கின்றனர்.
மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர்
அது நிறைவேறாத பட்சத்தில் ஜெனீவாவில் தற்போது நடந்து வரும் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில், 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் கொல்லப்பட்ட இளைஞர் ஒருவரின் தந்தை, காணொளி தொழில்நுட்பம் மூலம் இணைந்து கொண்டு, இலங்கையில் நடந்து வரும் விசாரணைகளில் நீதி கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற விடயங்கள் நாட்டிற்குப் பொருத்தமில்லாத விடயங்கள் என்பதால், இங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.
இதேவேளை, பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிரான அவநம்பிக்கைப் பிரேரணையை நிராகரிப்பதற்கு ஏதுவாக அமைந்த காரணங்களை சபாநாயகர் சபைக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
நம்பிக்கையில்லா பிரேரணை
பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தொடர்பில் எமக்கு தனிப்பட்ட எந்தப் பிரச்சினைகளும் இல்லை. அவர் தற்போது பதில் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானமொன்றைக் கொண்டு வந்ததன் பின்னர், அதனை நிராகரிப்பதற்கு அடிப்படையாக இருந்த செயலாளர்கள் குழாமின் அறிக்கைகள் மற்றும் சட்டமா அதிபரின் அறிக்கை உள்ளிட்ட ஏனைய விடயங்கள் இந்த சபைக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
