இலங்கை தொடர்பில் வெளிநாட்டில் அச்ச நிலை!! வரமறுக்கும் முதலீட்டாளர்கள்
ஒரு நாடு ஒரு சட்டம் செயலணி ஊடாக பௌத்த அடிப்படைவாதம் தலைதூக்கியுள்ள அதேவேளை இலங்கை தொடர்பில் முதலீட்டாளர்களின் மத்தியிலும் அச்ச நிலைமை ஏற்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் (Shanakiyan Rajaputhiran Rasamanickam), ஒரே நாடு ஒரே சட்டம் செயலணி ஊடாக நாட்டை முன்னோக்கி நகரத்த முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
“நான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கனடா, பிரித்தானியா மற்றும் அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தேன். அங்குள்ள முதலீட்டாளர்கள், இலங்கைக்கு வர அச்சப்படுகிறார்கள்.
நாட்டில் எவ்வேளையிலும் குண்டுத்தாக்குதல் இடம்பெறலாம். என்றால், எப்படி வந்து முதலீடு செய்வது என எம்மிடம் அவர்கள் கேள்வி கேட்கிறார்கள்.
ஒரு நாடு - ஒரு சட்டம் எனும் செயணி ஊடாக, இலங்கைக்கு வரவுள்ள டொலர்கள் இல்லாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எதிர்க்காலத்தில் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையும் இல்லாதுபோகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
இப்படியே சென்றால், இலங்கையில் எந்தவொரு வியாபாரமும் செய்ய முடியாத நிலைமை ஏற்படலாம்.
ஒருநாடு - ஒரு சட்டம் என்பதன் ஊடாக இலங்கையில் பௌத்த அடிப்படைவாதம் தலைத்தூக்கியுள்ளது. ஒரு நாடு - ஒரு சட்டம் என்பதை வைத்து நாட்டை ஒருபோதும் முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியாது என்பதை அனைவரும் புரிந்துக் கொள்ள வேண்டும்.
நாம் இந்த அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டுமென்றோ, ஆட்சியைக் கைப்பற்ற வேண்டுமென்றோ ஒருபோதும் நினைக்கவில்லை.
மாறாக பொருளாதாரத்தை வளர்க்கவும் நாட்டின் பிரச்சினைகளைத் தீர்க்கவும் இணைந்து செயற்படத் தயார் என்பதையே கூற விரும்புகிறோம்” என்றார்.