தீர்ப்புக்குப் பின்னரும் தொடரும் அச்சம்: வித்தியாவின் தாயார் உருக்கம்
யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கின் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னரான சூழலில் தனக்கும் தனது குடும்பத்திற்கும் கடுமையான அச்சுறுத்தல்கள் நிலவி வருவதாக வித்தியாவின் தாயார் மிகுந்த அச்சத்துடன் தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற தீர்ப்பின் பின்னர் புங்குடுதீவில் உள்ள தங்களது குடும்பத்தின் தற்போதைய அவலநிலை குறித்தும் நிலவும் பாதுகாப்பு அச்சம் குறித்தும் ஐபிசி தமிழ் ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் அவர் கனத்த இதயத்துடன் பல அதிர்ச்சித் தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
வித்தியா படுகொலை வழக்கில் அண்மையில் இலங்கையின் உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கியிருந்தது. இத்தீர்ப்பினைத் தொடர்ந்து: மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவர் சிறைச்சாலையினுள் தற்கொலை செய்துகொண்டார். இதேவேளை இந்த வழக்கிலிருந்து இருவரை உச்சநீதிமன்றம் முழுமையாக விடுதலை செய்திருந்தது.
இந்தத் தீர்ப்புகளுக்குப் பின்னர் தங்களுக்கு எதிரான மறைமுக அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக வித்தியாவின் தாயார் குற்றம் சாட்டியுள்ளார்.
'மகள் போன வடு இன்னும் நெஞ்சில் ஆறவில்லை. அதற்குள் இப்போது வாழும் சூழலிலும் நிம்மதியில்லை. ஒவ்வொரு நாளையும் இரவையும் பெரும் பயத்துடனேயே கடக்க வேண்டியுள்ளது' என அவர் கண்ணீருடன் விவரித்துள்ளார்.
வழக்கிலிருந்து சிலர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாலும் குற்றவாளி ஒருவர் சிறையில் உயிரிழந்துள்ளதாலும் அதற்குப் பழிவாங்கும் நோக்கில் தங்களுக்கு ஏதேனும் ஆபத்து நேரிடலாம் என்ற பலத்த அச்ச சூழ்நிலை புங்குடுதீவில் உள்ள அவர்களது குடும்பத்திற்கு ஏற்பட்டுள்ளது.
வித்தியாவின் படுகொலைக்கு நீதி கோரி ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் சர்வதேசமும் ஒன்றிணைந்து குரல் கொடுத்திருந்தன. எனினும் சட்ட ரீதியான தீர்ப்பு கிடைத்துள்ள போதிலும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கான வாழ்வுரிமையும் பாதுகாப்பும் இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது என்பதை தாயாரின் இந்த உருக்கமான பதிவு வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது.
தமக்கும் தங்களது குடும்பத்திற்கும் உரிய பாதுகாப்பை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்பதே அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் வாழும் வித்தியாவின் தாயாரின் தற்போதைய பிரதான கோரிக்கையாக உள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |