பேராசிரியர் ரகுராம் மீதான அவதூறு கூற்றுகளை அகற்ற வேண்டும்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவதூறுகளை பரப்பியவர்களின் பதிவுகளை அகற்றுவதுடன், பேராசிரியர் ரகுராம் தொடர்பாக எந்த அவதூறு பதிவுகளையும் செய்ய கூடாது என இடைக்கால கட்டளையொன்றை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கு விசாரணையில் எதிர்மனுதாரர் ஒருவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்வதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் மீது சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பினர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தனர் என்ற குற்றச்சாட்டில் 14 எதிர் மனுதாரர்களுக்கு நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
தடை செய்யப்பட்ட கூற்றுக்கள்
குறித்த வழக்கு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது முதலாம், மூன்றாம்,நான்காம்,ஐந்தாம், ஆறாம் எதிர் மனுதாரர்கள் சமூக வலைத்தளங்களில் பேராசிரியர் ரகுராம் தொடர்பாக அவதூறான மற்றும் தடை செய்யப்பட்ட கூற்றுக்கள் பதிவு செய்தமையை ஏற்றுக்கொண்ட மன்று இதுவரை அவ்வாறு போடப்பட்டிருந்த பதிவுகளை அகற்றுவதோடு, இது சம்பந்தப்பட்ட எந்த விடயத்தையும் எந்த ஒரு சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யக்கூடாது என இடைக்கால கட்டளையிட்டது.
இந்த நிபந்தனைக்குட்பட்ட இடைக்கால கட்டளையை, இறுதி கட்டளையாக ஆக்குவதா இல்லையா என்பதை தீர்மானிப்பதற்காக, விசாரணைகள் தொடர்ந்து நடைபெறுவதோடு, ஒன்று தொடக்கம் 13 வரையான எதிர்மனுதாரர்களுக்கு இரண்டு கிழமைகளுக்குள் அழைப்பாணையை அனுப்புமாறு மன்று உத்தரவிட்டது.
எதிர்மனுதாரர்கள் அனைவருமே இரண்டு வாரங்களுக்குள் காரணங்காட்டுதல்களுக்காக மன்றுக்கு முனிலையாகி தங்களுடைய சமர்ப்பணங்களை முன்வைக்குமாறும் எதிர் மனுதாரர்கள் இதனை செய்யாவிட்டால் இந்த விடயத்தில் அவர்கள் குற்றவாளிகளாக கருதப்பட்டு மன்றினால் தீர்ப்பளிக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
எதிர் மனுதாரர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்த கருத்துக்கள் முகத்தோற்றத்தின் அடிப்படையில அவதூறு மற்றும் தடை செய்யப்பட்ட கூற்றுக்களாக இருப்பதோடு, அது தொடர்பான விசாரணைகளுக்காகவும் காரணங்காட்டுதலுக்காகவும் ஜூலை 27ம் திகதிக்கு வழக்கை மன்று திகதியிட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |