உரம் இறக்குமதிக்கான அனுமதி -அமைச்சர்களிடையே மோதல்
சேதன பசளை இறக்குமதி தொடர்பில் அமைச்சர்களிடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் பெரும்போகத்துக்கு தேவையான சேதன பசளை இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியதாக ஒரு அமைச்சரும் அப்படி அனுமதி எதனையும் அமைச்சரவை வழங்கவில்லை என மற்றுமொரு அமைச்சரும் தெரிவித்து அரசாங்கத்துக்குள் இருக்கும் முரண்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர்.
2021-22 பெரும்போக செய்கைக்கு பயன்படுத்தவென சேதன பசளை இறக்குமதி செய்ய விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே முன்வைத்த அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது.
குறித்த பெரும்போக காலத்திற்கு தேவையான போதியளவு சேதன பசளை உள்நாட்டில் உற்பத்தி செய்ய முடியாத காரணத்தால் விவசாய அமைச்சரின் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது என ரமேஸ் பத்திரண ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதில் அளித்துள்ள இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ஷ, சேதன பசளை இறக்குமதி செய்ய எமக்கு ஒருபோதும் அமைச்சரவை அனுமதி அளிக்கவில்லை.
தற்போது 1% நைட்ரிஜன் அடங்கிய சேதன பசளையும் 3% நைட்ரிஜன் அடங்கிய சேதன பசளையும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டு வருகிறது. எமக்கு நைட்ரிஜன் இறக்குமதி செய்யவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நைட்ரிஜன் கலவையுடனான தேசிய உற்பத்தி சேதன பசளை பயன்படுத்தி அம்பாறையில் பெரும்போக செய்கை ஆரம்பிக்க விவசாய அமைச்சு தயார் நிலையில் உள்ளதாக சசீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
முன்னரும் உர இறக்குமதிக்கான அனுமதியை நிதியமைச்சர் பஸில் ராஜபக்ச வழங்கியதாக தகவல் வெளியான நிலையில் அப்படி எதுவும் வழங்கப்படவில்லை என ஜனாதிபதி செயலகம் உடனடியா மறுப்பு வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.