இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள உருக்கமான வேண்டுகோள்
நெருக்கடியான சூழல் மாறாது
நாட்டில் உள்ள நெருக்கடியான சூழல் ஒருபோதும் மாறப்போவதில்லை. எமது சந்ததியை பாதுகாப்பது எமது தலையாய கடமை அதற்காக அனைவரும் புரிந்துணர்வோடு இணைவோம் என அதிபர்களிடம் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளது.
இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேய இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில்,
நாடு நெருக்கடியான சூழ்நிலைக்குள் அகப்பட்டுவிட்டது. இதனை மீட்க அரசாங்கம் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோற்றுப்போய்விட்டன. நாளுக்கு நாள் வரிசைகள் பெருகுகின்றதே தவிர எந்த முன்னேற்றமும் இல்லை. இந்த அபாயகரமான சூழ்நிலையில் இலங்கையில் உள்ள குழந்தைகளின் வாழ்வு எமது கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தான்தோன்றித்தனமாக நடக்கும் அரசு
பாடசாலைகளைச் சீராக இயக்குவதற்கான எந்தப் பொறிமுறையும் அரசிடம் கிடையாது. எம்மால் முன்வைக்கப்பட்ட பொறிமுறைகளையும் அரசாங்கம் நடைமுறைப்படுத்தாமல் தான்றோன்றித்தனமாக விவசாயிகளுக்கு வழங்கிய முடிவைப் போன்று கல்வியிலும் முடிவுகளை எடுக்கின்றது.
அதில் ஒருசில மாவட்டங்களில் பாடசாலைகளை மூடுதல், கிராமப்புற பாடசாலைகளைக் கைவிடுதல், முழு மாணவர்களுக்கும் பயனளிக்காத இணையவழி கற்றலை அமுல்படுத்துதல் போன்ற தவறான முடிவுகளே எடுக்கப்படுகின்றன.
சமயோசிதமான முடிவுகளை எடுத்த அதிபர்கள்
ஆனால் அரசாங்கம் எந்த முடிவை எடுத்தாலும் நெருக்கடியான காலங்களில் அதிபர்களே சமயோசிதமான முடிவுகளை எடுத்தார்கள் என்பதனை மறுக்க முடியாது.அதே போன்று இன்னும் நெருக்கடியான இந்தச் சூழ்நிலையில் அதிபர்கள் மிக்க நிதானத்துடன் பாடசாலையின் அனைத்து மனித மனங்களையும் இணைத்து முரண்பாடுகள் இல்லாமல் எம்மை நம்பி ஒப்படைக்கப்பட்ட குழந்தைகளின் அறிவு வளம்பெற அடுத்த படிநிலையை உருவாக்குவோம். என உருக்கமாக உங்களை வேண்டிக் கொள்கின்றோம்.
விசேடமாக ஆசிரியர்களின் பொருளாதார நிலை, போக்குவரத்து, அவர்களின் குடும்பநிலை என்பவற்றை கருத்தில் கொண்டு உச்ச நெகிழ்ச்சிப் போக்கோடு அனைத்தையும் கையாளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்றுள்ளது.
