அமெரிக்காவில் விமானக்கண்காட்சியின்போது நடுவானில் மோதிய போர்விமானங்கள்
அமெரிக்காவில் இடம்பெற்ற விமானக் கண்காட்சியின் போது நடுவானில் இரண்டு போர் விமானங்கள் மோதிக்கொண்டபோதிலும், விமானங்களில் இருந்த நான்கு விமானிகளும் பாதுகாப்பாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்குள்ளான அமெரிக்க கடற்படையின் EA18-G ரக விமானங்கள் வான்வழி சாகச நிகழ்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது இடம்பெற்ற விபத்தை அடுத்து, அனைத்து விமானிகளும் பாதுகாப்பாக வெளியேறினர் என்று அமெரிக்க கடற்படை செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம் தெரிவித்தார். அவர்கள் காயமடைந்தனரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
தீவிபத்தை அடுத்து நிகழ்வுகள் இரத்து
ஐடஹோவின் மவுண்டன் ஹோம் விமானப்படைத் தளத்திலிருந்து 2 மைல் (3.2 கி.மீ) வடமேற்கில், கன்ஃபைட்டர் ஸ்கைஸ் விமானக் கண்காட்சியின் இரண்டாவது மற்றும் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமையன்று(17) இந்த பரபரப்பான சம்பவம் நிகழ்ந்தது.

தீ விபத்து ஏற்பட்டதால், விமானக் கண்காட்சியின் மீதமுள்ள நிகழ்வுகள் இரத்து செய்யப்பட்டு, தளம் சிறிது நேரம் மூடப்பட்டது. விசாரணை நடைபெற்று வருகிறது.
மருத்துவப் பணியாளர்கள் பரிசோதனை
விமானக் குழுவினரை மருத்துவப் பணியாளர்கள் பரிசோதித்து வருவதாகக் கடற்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

EA-18G கிரௌலர் விமானங்கள், வோஷிங்டன் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மின்னணுத் தாக்குதல் படைப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்டிருந்தன. அந்த ஒவ்வொரு ஜெட் விமானத்தின் விலையும் சுமார் $67 மில்லியன் (£50.3 மில்லியன்) என்று அமெரிக்கக் கடற்படை கூறுகிறது.
கன்ஃபைட்டர் ஸ்கைஸ் விமானக் கண்காட்சி கடைசியாக 2018-ல் நடைபெற்றது, அப்போது ஒரு கிளைடர் விமானி விபத்தில் உயிரிழந்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |