22ஆவது திருத்தத்திற்கு எதிரான மனுக்கள் நாளை பரசீலனைக்கு!
புதிய இணைப்பு
அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை ஆட்சேபனைக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை நாளைய தினம் (01) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
அதன்படி குறித்த மனுக்களை பரிசீலனை செய்வதற்காக ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாமொன்று நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இதன் தலைவராக பிரதம நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன செயற்படவுள்ளார்.
நீதியரசர்களான அச்சல வெங்கப்புலி, அர்ச்சுன ஒபேசேகர, சம்பத் அபேகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோர் குறித்த குழாமின் ஏனைய உறுப்பினர்களாக செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் : இன்றுடன் நிறைவடையும் காலக்கெடு!
இலங்கையின் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் (31) நிறைவடைகின்றது.
நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவால் கடந்த 18 ஆம் திகதி 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உட்பட பல சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் இச்சட்ட மூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்
இதேவேளை உத்தேச அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்திற்குத் தமது எதிர்ப்பை வெளிப்படுத்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கமும் அரச பல் சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர்கள் சங்கமும் தீர்மானித்துள்ளன.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட தொடர்புடைய அனைத்துத் தொழில்முறை அமைப்புகளுடனும் இணைந்து இந்த முன்மொழிவுக்கு எதிராகச் செயற்பட அந்தச் சங்கங்களின் பிரதிநிதிகள் உடன்பாட்டுக்கு வந்துள்ளனர்.
இந்தநிலையில் 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக இதுவரை 27 மனுக்களும், அதற்கு ஆதரவாக 3 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |