இலங்கையில் தொடரும் கிரிக்கெட் சர்ச்சை : நிர்வாகத்தை நீதிமன்றத்தால் மாத்திரமே கலைக்க முடியும்!
சிறிலங்காவின் கிரிக்கெட் நிர்வாகத்தை கலைப்பது தொடர்பில் நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டுமென நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று இது தொடர்பான பிரேரணை நிறைவேற்றப்பட்டாலும், நீதிமன்றமே இறுதி தீர்மானத்தை மேற்கொள்ள முடியுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே, அவர் இதனை கூறியுள்ளார்.
நிலுவையிலுள்ள வழக்குகள்
கிரிக்கெட் நிர்வாகம் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளதாக விஜயதாச ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்வரும் நாட்களில் இது தொடர்பான விடயங்களை சிறிலங்காவின் விளையாட்டுத்துறை அமைச்சர் நீதிமன்றத்தில் முன்வைப்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்ற விசாரணை
இதேவேளை, தனிப்பட்ட சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலையாகி, விடயங்களை சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக சிறிலங்கா விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்ற ஊழல் ,மோசடி தொடர்பான விடயங்கள் வெளிக்கொணரப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை எந்தவித சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய கிரிக்கெட் தெரிவுக்குழு
மேலும், உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் என்ன நடந்தது என்பதை இரண்டு நாட்களில் வெளிப்படுத்துவதாக தேசிய கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் ப்ரமோத்ய விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த தொடரில் ஒரு குழுவினரின் சூழ்ச்சி காணப்பட்டதாகவும், அது தொடர்பில் வெளிப்படுத்த எதிர்பார்த்திருப்பதாகவும், குறித்த நடவடிக்கையை முன்னெடுக்க கால அவகாசம் தேவைப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.