மன்னாரில் துப்பாக்கி சூடு! மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்
மன்னார் - மதவாச்சி பிரதான வீதி, உயிலங்குளம் - நொச்சிக்குளம் பகுதியை சேர்ந்த ஒருவரை இலக்குவைத்து துப்பாக்கி பிரயோகம் முன்னெடுக்கப்பட்ட நிலையில், குறித்த கிராம மக்கள் குறித்த வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், இன்று திங்கட்கிழமை(19) காலை 8.30 மணியளவில் நொச்சி குளத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது கிராமத்தில் உள்ள தனது வயலில் நீர் பாய்ச்சிக் கொண்டு இருந்த வேளையில் மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள் ஒரு ரி-56 ரக துப்பாக்கி மூலம் அந்த விவசாயி மீது துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளனர் எனினும் குறிப்பிட்ட விவசாயி மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.
போராட்டம்
மேலும், இந்த கிராமத்துக்கு காவல்துறையினரின் காவல் போடப்பட்டும் அதையும் மீறி குறித்த சம்பவம் தொடர்வதாகவும் இன்றைய தினம் நடைபெற்ற சம்பவத்தை கண்டித்தும் நொச்சிக்குளம் கிராம மக்கள் பதாதைகளுடன் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த பதாதைகளில் “கொலைகாரர்களுக்கு ஆயுதம் கொடுத்தது யார்?' 'எங்களை பாதுகாப்பது அரசின் கடமை' 'எங்கள் உயிருக்கு பாதுகாப்பு தாருங்கள்' எங்கள் மக்களுக்கு நீதி இல்லையா? யார் தருவது” போன்ற வாசகங்களை குறிப்பிட்டுள்ளனர்.
தீவிர விசாரணை
இத்துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் உடன் சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக மன்னார் மற்றும் உயிலங்குளம் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை தொடர்ந்து இன்று திங்கட்கிழமை காலை முதல் மன்னார் பிரதான பாலம் ஊடாக மன்னார் நகருக்கு வருகை தரும் அனைத்து வாகனங்களும், காவல்துறையினரால் விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |