ஐபிஎல் ஏலத்தை நடத்தப்போகும் பெண்: ஐபிஎல் நிர்வாக குழுவின் திடீர் முடிவு!
இந்தியாவை சேர்ந்த மல்லிகா சாகர் என்ற பெண் முதல் முறையாக ஐபிஎல் தொடருக்கான ஏலத்தை நடத்தப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் எதிர்வரும் 19ஆம் திகதி துபாயில் உள்ள கோகோ கோலா வளாகத்தில் நடைப்பெறவுள்ளது.
16 வருடகால ஐபில் வரலாற்றில் இந்தியாவில் இல்லாமல் வெளிநாட்டில் ஐபிஎல் ஏலம் நடக்கவுள்ளது இதுவே முதல் முறையாகும்.
ஐபிஎல் நிர்வாக குழுவின் முடிவு
மினி ஏலத்தில் பங்கேற்பதற்காக இந்தியாவில் இருந்து 830 வீரர்களும், 336 வெளிநாட்டு வீரர்களுமாக மொத்தம் 1,166 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
ஆனால் 10 ஐபிஎல் அணிகளுக்கும் 77 வீரர்களுக்கான இடங்களே தேவையாக உள்ளது.
அதிலும், 30 வெளிநாட்டு வீரர்களையும் 47 இந்திய வீரர்களையும் ஏலத்தில் எடுக்க வேண்டும்.
இம்முறை ஐபிஎல் ஏலத்தை நடத்தவுள்ள ஏலதாரரை மாற்றுவதற்கு ஐபிஎல் நிர்வாக குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மல்லிகா சாகர்
இதுவரையில் நடந்த ஐபிஎல் ஏலத்தை ரிச்சர்ட் மெட்லி, சாரு சர்மா, ஹூஜ் எட்மெடாஸ் ஆகியோர் நடாத்தியுள்ளனர்.
இந்நிலையில்,மும்பையை சேர்ந்த மல்லிகா சாகர் என்பவரை இம்முறை ஐபிஎல் ஏலதாரராக ஐபிஎல் நிர்வாக குழு நியமித்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
இவர் ஏற்கனவே 2021ஆம் ஆண்டு முதல் ப்ரோ கபடி லீக் ஏலத்தில் நடத்தியுள்ளதோடு மகளிர் பிரீமியர் லீக்(wpl) தொடருக்கான ஏலத்தையும் நடத்தியுள்ளார்.
2001ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஏல நிறுவனத்தில் தனது பயணத்தை தொடங்கிய மல்லிகா சாகர் ஐபிஎல் தொடருக்கான ஏலத்தை நடத்தும் பெண்ணாக சாதனை படைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |