யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்
திட்டமிட்ட வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் அபாயகரமான கூரிய இரு வாள்களுடன் ஐவர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், யாழ்ப்பாணத்தின் பிரபல வர்த்தக நிறுவனம் ஒன்றிற்கு உரியதாக சந்தேகிக்கப்படும் கார் ஒன்றும் குறித்த சந்தேக நபர்களுடன் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தெரியவருகையில், யாழ் இந்துக் கல்லூரிக்கு அண்மையில் கடந்த 5 ஆம் திகதி ஒரு இளைஞனை 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று கடத்திச் சென்றிருந்தது.
நிறுத்தாது சென்ற கார்
கடத்தப்பட்ட இளைஞனை கைதடிக்கு கொண்டுசென்ற சம்பந்தப்பட்ட கும்பல் அந்த இளைஞனை உடைகளை களைந்து சித்திரவதை செய்தபின் காயங்களுக்குள்ளான நபரை யாழ். பொஸ்கோ பாடசாலை அருகில் கொண்டுவந்து விடுவித்துள்ளனர்.

இந்நிலையில், கார் வேகமாக ஓட்டி சென்றபோது வீதிக்கடமையில் இருந்த காவல்துறையினர் இடைமறித்தபோது நிறுத்தாது வேகமாக சென்றுள்ளது.
சந்தேகமுற்ற காவல்துறையினர் குறித்த காரை துரத்திச் சென்று இடைமறித்து சோதித்த நிலையில், அதற்குள் இருந்து இரு கூரிய வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணை
அத்துடன் காரின் கதவு மற்றும் ஆசனங்களில் இரத்த கறையும் அவதானிக்கப்பட்டுள்ளதோடு, ஆணொருவரின் சட்டையும் இரத்தக் கறையுடன் மீட்கப்பட்டுள்ளது.

இதையடுத்து காவல்துறையினர், குறித்த ஐவரிடமும் விசாரணை நடத்தியதில் 2 .5 கிராம் ஐஸ் போதைப்பொருளும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, விசாரணையில் கடத்தலுடன் தொடர்புடைய பாதிக்கப்பட்ட இளைஞன் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் யாழ்ப்பாணம் காவல்நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரத்னவின் ஒழுங்குபடுத்தலில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் - தீபன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |