யாழ்ப்பாணத்தில் காவல்துறையிடம் சிக்கிய அதிக வேகத்திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்கள்
யாழ்ப்பாணம், கோப்பாய் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில், வீடொன்றினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த அதிதிறன் கொண்ட ஐந்து மோட்டார் சைக்கிள்களைக் கண்டறிந்த காவல்துறையினர்அவற்றைக் கைப்பற்றியதுடன், 50 வயதுடைய நபர் ஒருவரையும்கைது செய்துள்ளனர்.
கல்வியன்காடு பகுதியில் உள்ள வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் இடம்பெறுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணப் பிரிவு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நேற்று(17 )அந்த வீட்டில் சோதனை நடத்தினர் என்று காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தச் சோதனையின்போது, வீட்டின் உள்ளே மறைத்து வைக்கப்பட்டிருந்த, அதிக திறன் கொண்ட எஞ்சின்களைக் கொண்ட ஐந்து மோட்டார் சைக்கிள்களை அதிகாரிகள் மீட்டனர்.
சந்தேக நபர் ஒருவர் கைது
மேலும், போலியான வாகனப் பதிவுச் சான்றிதழ்களைத் தயாரிக்கும் செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

கல்வியன்காட்டைச் சேர்ந்த 50 வயதான அந்தச் சந்தேக நபர், கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்களுடன் கோப்பாய் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். இந்தச் சம்பவம் குறித்து கோப்பாய் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |