மயில் வேட்டை விவகாரம்: நான்கு ஆண்டுகளின் பின்னர் கைதான பழங்குடியினர்
மாதுருஒய (Maduru Oya) வனப்பகுதியில் சட்டவிரோதமாக நுழைந்து மயில் ஒன்றை வேட்டையாடி உட்கொண்ட காணொளியில் தோன்றிய பழங்குடியினர் ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் சரணடைந்ததையடுத்து கைது செய்யப்பட்டதாக வனவிலங்கு திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டவர் ஒருவருக்கு சொந்தமான 'பெஸ்ட் எவர் புட் ரிவீவ் ஷோ' என்ற யூரியுப் (youtube) தளத்தினால் 2020ஆம் ஆண்டு மாதுருஒய – தெஹிஅத்த எல பகுதியில், ஈட்டியைப் பயன்படுத்தி மயில் ஒன்றை வேட்டையாடி உட்கொள்கின்றமை தொடர்பான காணொளி வெளியிடப்பட்டது.
நீதிமன்றில் முன்னிலைப்படுத்த
பழங்குடி ஒருவரினால் மயில் வேட்டையாடப்படுவதாகவும் அதனைப் பலர் உட்கொள்ளும் வகையிலும் குறித்த காணொளி அமைந்திருந்தது.
கடந்த மாதம் 14ஆம் திகதி மதுருஓயா தேசிய பூங்காவின் விலங்கின பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மஹியங்கனை நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்ததையடுத்து, வெளிநாட்டவர் உள்ளிட்ட ஆறு பேரையும் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இதனையடுத்து, முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய, குறித்த மயிலை தாங்கள் கொல்லவில்லை என சந்தேக நபர்கள் தெரிவித்துள்ளதுடன் ,கொல்லப்பட்ட விலங்கை தம்பனை பாடசாலைக்கு அருகில் வசிக்கும் நபர் ஒருவர் படம் எடுப்பதற்காக அழைத்து வந்ததாக பழங்குடியினர் தெரிவித்துள்ளனர்.
விசாரணையில் இவர்தான் இந்த ஆதிவாசிகளை வெளிநாட்டவர் உள்ளிட்ட கும்பலுடன் இணைத்தது தெரியவந்துள்ளது.
பழங்குடியினரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது, தலா ஒரு இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். மேலும், சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை வனஜீவராசிகள் திணைக்களம் ஆரம்பித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |