பேராதனைப் பல்கலையின் கல்விச் செயற்பாடுகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்!
புதிய இணைப்பு
நிலவும் மோசமான வானிலை நிலையை கருத்தில் கொண்டு, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்விச் செயற்பாடுகளும் மற்றும் பரீட்சைகளும் மறுஅறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
எனினும், பல்கலைக்கழகத்தின் அத்தியாவசிய சேவைகள் வழமையானபடி தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மாணவர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் பேராதனைப் பல்கலைக்கழக நிர்வாகம் உபவேந்தர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் கையொப்பத்துடன் பின்வரும் அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, பாதுகாப்பாக தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்லக்கூடிய மாணவர்கள் அவ்வாறு செல்லலாம்.
மோசமான வானிலை காரணமாக வீடுகளுக்குச் செல்ல முடியாத மாணவர்கள், சரசவி மெதுர விடுதியைத் தவிர்ந்த ஏனைய பல்கலைக்கழக விடுதிகளில், சம்பந்தப்பட்ட விடுதி நிர்வாகத்துக்கு அறிவித்த பின்னர் தங்கியிருக்கலாம்.
ஆபத்தான தனியார் தங்குமிடங்களில் தங்கியிருக்கும் மாணவர்கள் பாதுகாப்பு கருதி பல்கலைக்கழக விடுதிகளுக்கு வருவார்களானால், அவர்களை ஏற்றுக்கொண்டு தேவையான பதிவுகளை பராமரிக்குமாறு விடுதி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எந்த மாணவரும் விடுதிகளை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் எனவும் பல்கலைக்கழகம் வலியுறுத்தியுள்ளது.
நிலைமை வழமைக்குத் திரும்பும் வரை, பல்கலைக்கழக சமூகத்தினர் அனைவரும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றி செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகம் மீண்டும் திறக்கப்படும் திகதி பின்னர் ஊடகங்கள் வாயிலாக அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
பேராதனைப் பல்கலை விடுதிக்குள் வெள்ளப் பெருக்கு : மாணவர்கள் வெளியேற்றம்!
தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக மகாவலி கங்கை பகுதியில் அமைந்துள்ள பேராதனைப் பல்கலைக்கழகத்தின் "சரசவி மெதுர" விடுதியின் கீழ் தளத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெள்ளப் பெருக்கு காரணமாக குறித்த விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் ஏனைய மாணவர்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
நீர்மட்டம் உயர்வு
இதேவேளை மகாவலி கங்கையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், வெள்ள அபாயம் குறித்து மாணவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு பேராதனைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
இதனால் ஏற்படும் பேரழிவுகளைத் தவிர்க்க, மகாவலி ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் துணைவேந்தர் வலியுறுத்தியுள்ளார்.

நேற்றிரவு (02) முதல் பெய்து வரும் தொடர் கனமழையால் மகாவலி ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதுடன் பேராதனை 'களு பாலம' அருகே உள்ள பாலம் புனரமைப்புத் தளம் ஏற்கனவே வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அங்குள்ள பல கனரக இயந்திரங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் மேலும் சில உபகரணங்கள் மற்றும் கட்டுமானப் பொருட்கள் பலத்த நீரோட்டத்தால் அடித்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், அடுத்த 24 மணி நேரத்தில் மகாவலி ஆற்றங்கரையோரம் உள்ள பல தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாயம் இருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |