ஸ்ரீரங்கா உள்ளிட்ட கால்பந்து சம்மேளனத்தின் புதிய நிர்வாகத்தினருக்கு விதிக்கப்பட்டது இடைக்கால தடை!
இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் புதிய தலைவர் ஜே. ஸ்ரீ ரங்கா உட்பட புதிய நிர்வாக குழாமுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
இந்த தடை உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நாளை வரை நடைமுறையில் இருக்கும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தடையுத்தரவு

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் ஜஸ்வர் உமர் தாக்கல் செய்த முறைப்பாடு தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த இடைக்கால தடையுத்தரவை வழங்கியுள்ளது.
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை முன்னாள் தலைவர் ஜஸ்வர் உமருக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க மறுத்திருந்தார்.
கொடுக்கப்படாத வாய்ப்பு

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தனக்கு தலைவர் பதவிக்கு வாய்ப்பு வழங்காமல் பாரிய அநீதி இழைத்ததாக நேற்று பிற்பகல் ஜஸ்வர் உமர் நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
அதற்கமையவே தற்போதைய நிர்வாகத்திற்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.