கனடாவில் உதைபந்தாட்டத் தொடர் : தமிழீழ மகளிர் அணி வெற்றி
கனடா (Canada) - மார்க்கம் நகரில் நடந்த நட்புரீதியிலான இரண்டு காற்பந்துப் போட்டிகளிலும் தமிழீழ மகளிர் அணி வெற்றி பெற்றுள்ளது.
FIFA எனப்படும் சர்வதேச காற்பந்துக் கூட்டமைப்பில், அங்கீகரிக்கப்பட்ட நாடுகளின் காற்பந்துச் சங்கங்கள் அங்கம் வகிக்கின்றன.
இதில் உறுப்பினர்களாக இல்லாத அங்கீகரிக்கப்படாத நாடுகளும் நாடற்றவர்கள், சிறுபான்மை இனக்குழுமங்களின் அணிகளும் அங்கத்துவம் வகிக்கும் CONIFA எனப்படும் சுயாதீனக் காற்பந்துக் கழகங்களின் கூட்டமைப்பில் தமிழீழ ஆண்கள் அணியும் மகளிர் அணியும் இணைந்து போட்டிகளில் பங்குபற்றி வருகின்றன.
தமிழீழ மகளிர் அணி
இந்நிலையில், லாவோஸ், வியட்நாம், தாய்லாந்து, மியன்மார் போன்ற நாடுகளிலும் தென்மேற்கு சீனாவிலும் பரந்துவாழும் ஹுமாங் இனக்குழுமத்தினரின் அங்கீகரிக்கப்படாத தேசமான ஹுமாங்-இன் மகளிர் காற்பந்து அணிக்கும் தமிழீழ மகளிர் அணிக்குமிடையிலான நட்புரீதியிலான இரண்டு காற்பந்துப் போட்டிகள் கடந்த சனி, ஞாயிறு இருநாள்களும் கனடா - மார்க்கம் நகரில் நடைபெற்றன.
சனிக்கிழமை நடந்த போட்டியில் தமிழீழ மகளிர் அணி, ஹுமாங் அணியை இரண்டுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் வெற்றி கொண்டது. தமிழீழ அணி சார்பில் பிரித்திகா, டிலக்சிகா ஆகியோர் கோல்களை அடித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை ஆட்டத்தில் தமிழீழ மகளிர் அணியினர், ஹுமாங் அணியினரை 2:0 என்ற கோல் கணக்கில் வெற்றி கொண்டனர். இந்த ஆட்டத்தில் தமிழீழ அணிக்காக டிலக்சிகா, கீசா ஆகியோர் கோல்களை அடித்தனர்.
தமீழிழ அணிக்காக நோர்வே, சுவிற்சர்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகளிலிருந்து வந்திருந்த வீராங்கனைகள் கனடா வீராங்கனைகளோடு இணைந்து விளையாடினர்.
இந்தப் போட்டிகளுக்கான ஏற்பாடுகளைக் கனடியத் தமிழர் விளையாட்டுத் துறையினர் மேற்கொண்டனர்.
இந்த, கடந்த சனிக்கிழமை தமிழீழ மகளிர் அணியினர் கனடியத் தமிழ் வானொலியின் நட்சத்திரவிழா மேடையில் ஒன்ராறியோ மாகாண உளநலத்துறை இணை அமைச்சர் விஜய் தணிகாசலம் அவர்களால் மதிப்பளிக்கப்பட்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |





