யாழ் பல்கலையில் நடைபெற்ற அனைத்துலக தமிழ் பண்பாட்டு மாநாடு
புதிய இணைப்பு
உலகளாவிய ரீதியில் பிரதிநிதிகள் கலந்து கொண்ட அனைத்துலக தமிழ் பண்பாட்டு மாநாடு நேற்று (30) யாழ்ப்பாண பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் யாழ். பல்கலைக்கழக இந்து கற்கைகள் பீடாதிபதி பிரம்மஸ்ரீ ச. பத்மநாபன் தலைமையில் நடைபெற்றது.
யாழ் பல்கலைக்கழக இந்து நாகரீகத்துறையுடன் இணைந்து தஞ்சாவூர் அனைத்துலக பண்பாட்டு ஆய்வு மையம், தமிழ்நாடு திருநெறி தமிழ் சைவ சமய பாதுகாப்புப்பேரவை, இலண்டன் தமிழ் கல்வியகம், இலண்டன் உலகச் செம்மொழித்தமிழ் சங்கம் பிரான்ஸ் இந்திய வம்சாவளி மக்களுக்கான அமைப்பு ஆகியன இணைந்து மாநாட்டிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தன.
உலக நாடுகளில் இருந்து வந்த பிரதிநிதிகள்
சுவிட்சர்லாந்து, கனடா, இங்கிலாந்து, நோர்வே, ஜேர்மனி, பிரான்ஸ் மலேசியா, சிங்கப்பூர், ரீயூனியன் தீவுகள், தென்னாபிரிக்கா, இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.
பிரதம விருந்தினராக யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் கலாநிதி சி.சற்குணராசா கலந்து கொண்டதுடன் கௌரவ விருந்தினர்களாக இந்திய தூதுவர் எஸ்.சிறி சாய் முரளி, வடமாகாண பிரதம செயலாளர் தனுசா முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
யாழ். பல்கலைக்கழக இந்துநாகரீக துறைத்தலைவர் பேராசிரியர் திருமதி விக்னேஸ்வரி பவநேசன் வரவேற்புரையை நிகழ்த்தியதுடன் மாநாட்டின் நோக்கவுரையை மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் க.பாஸ்கரனும் வாழ்த்துரையை கலாநிதி ஆறுதிருமுருகனும் வழங்கினர்.
விருது வழங்கி கௌரவிப்பு
இம்மாநாட்டில் பேராசிரியர் சிவலிங்கராசா, பேராசிரியர் வேதநாதன், கலாநிதி ஆறு திருமுருகன், அறிஞர்கள், கலைஞர்கள், துறைசார் வல்லுனர்கள் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர்கள், உலக சாதனை செம்மல் விருது, இளம் கலைஞர்கள் எழுத்தாளர்களுக்கான விருதுகளும் வழங்கப்பட்டது.
சிறப்பு நிகழ்ச்சியாக கலைமாமணி கலாநிதி சாம்பசிவசோமாஸ்கந்தசர்மா வழங்கிய வள்ளிதிருமணம் வில்லிசை நிகழ்ச்சியும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
தமிழர்களின் பெருமை பேசும் ''தமிழ்ப்பண்பாடு'' - அனைத்துலக மாநாடு
உலகளாவிய ரீதியில் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் தமிழ்ப்பண்பாடு - அனைத்துலக மாநாடு எதிர்வரும் 30ஆம் திகதி முதல் யூலை 6ஆம் திகதி வரை யாழ்ப்பாணம், நுவரெலியா கொழும்பு ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.
குறித்த விடயத்தினை இந்த மாநாட்டின் இணைப்பாளரும் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தருமான பேராசிரியர். க.பாஸ்கரன் தெரிவித்தார்.
தொடக்க விழா 30ஆம் திகதி திங்கட்கிழமை யாழ்ப்பாண பல்கலைக்கழக (University of Jaffna) கைலாசபதி கலையரங்கில் யாழ். பல்கலைக்கழக இந்து கற்கைகள் பீடாதிபதி பிரம்மஸ்ரீ ச. பத்மநாபன் தலைமையில் நடைபெறும்.
பல நாடுகளில் இருந்து வரும் பிரதிநிதிகள்
சுவிட்சர்லாந்து, கனடா, இங்கிலாந்து, நோர்வே, ஜேர்மனி, பிரான்ஸ் மலேசியா சிங்கப்பூர், ரீயூனியன் தீவுகள், தென்ஆபிரிக்கா, இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
யூலை 2ஆம் திகதி நுவரெலியா மாவட்ட செயலக (District Secretariat Nuwara Eliya) ஆச்சரிய மண்டபத்தில் முற்பகல் 10 மணிக்கு தமிழ் பண்பாடு அனைத்துலக மாநாடு கொட்டகல ஆசிரிய கலாசாலை பிரதி முதல்வர் ஜெகநாதன் சற்குருநாதன் தலைமையில் ஆரம்பமாகும்.
அனைத்துலக தமிழ் பண்பாட்டு மாநாடு கொழும்பு மயூரபதி ஸ்ரீபத்ரகாளி அம்மன் ஆலய (Mayurapathy Sri Bhadrakali Temple) பண்பாட்டு கலையரங்கில் யூலை 2ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |










