கிழக்கு மாகாணத்திற்கு படையெடுக்கும் வெளிநாட்டு பறவைகள் (படங்கள்)
கிழக்கு மாகாணத்திற்கு வெளிநாட்டு பறவை இனங்கள் படையெடுத்தவண்ணமுள்ளன.
நாட்டில் நிலவும் கடுமையான வறட்சிக்கு கிழக்கு மாகாணமும் விதிவிலக்கல்ல.இருந்தபோதிலும் வறட்சிக்கு மத்தியிலும் வெளிநாட்டு பறவைகள் அதிகளவில் வந்துள்ளன.
அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி, சம்மாந்துறை, நிந்தவூர், மகாஓயா ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு, கொக்கடிச்சோலை, வெல்லாவெளி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள நீர் நிலைகளை நாடி இந்த வெளிநாட்டு பறவை இனங்கள் வருகை தருகின்றன.
3,000 மைல் தூரம் கடந்து பறந்து
இந்தப் பறவைகள் 3,000 மைல் தூரம் கடந்து பறந்து செல்லும் வல்லமை படைத்தவை. அவுஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து, ரஷ்யா, ஜேர்மனி, பிலிப்பைன்ஸ், சைபீரியா ஆகிய நாடுகளிலிருந்து பறவைகள் இங்கு வருகின்றன.
குறித்த வலசை பறவைகள் ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதம் வரை தங்கியிருந்து குஞ்சு பொரித்து பின்னர் குஞ்சுகளுடன் பறந்து செல்கின்றன. 23 க்கும் மேற்பட்ட பறவைகள் இங்கு வந்து கூடு கட்டுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
கொக்கு இனங்கள்
இதில் செங்கால் நாரை, பூநாரை, கூழைக்கடா, கடல்காகம், கடல்ஆலா, பாம்புத்தாரா,சாம்பல்நாரை, வெட்டிவாயன், கரன்டிவாயன்,வெள்ளை அரிவாள் மூக்கன், நாரை இனங்கள் அன்னப் பறவை உள்ளிட்ட கொக்கு இனங்கள் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.