உடனடி உதவிகளை வழங்கும் இந்தியா : அயல் நாடுகளிடம் எதிர்பார்ப்பது என்ன…!
அயல் நாடுகளுக்கு இந்தியா அளிக்கும் உதவியை அந்த நாடுகள் மதிக்க வேண்டும் என இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மேற்கு நாடுகளில், இந்தியா குறித்த தவறான பார்வை உள்ளது. அதை மாற்ற, நாம் தொடர்ந்து தெளிவாகவும், நேர்மையாகவும், அவர்களுடன் உரையாட வேண்டும்.
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை
இந்த உலகில் எதுவும் தனித்து இல்லை. நாம் மேற்கு நாடுகளை ஒதுக்கவோ வெறுக்கவோ முடியாது. அவர்களின் கூட்டாண்மையும் முக்கியம். பொதுவாக, ஒவ்வொரு நாடும் உள்நாட்டில் வளர்வதுடன் வெளிநாடுகளிலும் வளர வேண்டும்.

அயல் நாடுகளை அரவணைத்து அவர்களுடன் வளர்வதுதான் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மற்றும் இராஜதந்திரம்.
அந்த நாடுகளும் மதிக்க வேண்டும்
நாம், அயல் நாடுகளான பங்களாதேஷ், பாகிஸ்தான், நேபாளம்,மற்றும் சிறிலங்கா போன்றவற்றுடன் உறவையும், நட்பையும் பேணுகிறோம். அந்த நாடுகள் இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படும் போது, முதல் ஆளாக உதவி செய்கிறோம். அதை அந்த நாடுகளும் மதிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

நல்ல எண்ணமும், விரோத எண்ணமும் சமரசம் செய்துகொள்ள முடியாது. எமது மக்களின் பாதுகாப்புக்காகவும் அமைதிக்காகவும் எதை செய்ய வேண்டுமோ அதை கண்டிப்பாக செய்வோம். இதுதான் எமது நிலைப்பாடு என்றும் ஜெய்சங்கர் மேலும் கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |