கனவு காண்பதில் பயனில்லை -ஒரு பைசா கூட கிடைக்காது - அடித்துக் கூறுகிறது எதிர்க்கட்சி
கனவு காண்பதில் பயனில்லை
சர்வதேச சமுகம் எதிர்பார்க்கும் அரசியல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களை நிறைவேற்றும் வரை இலங்கைக்கு ஒரு பைசா கூட வெளிநாட்டு கடன் உதவி கிடைக்காது என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஸ்மன் கிரியெல்ல இன்று (31) கொழும்பில் தெரிவித்தார்.
நாட்டை கட்டியெழுப்புவதற்கு தேவையான பொருளாதார மற்றும் அரசியல் சீர்திருத்தங்களில் கவனம் செலுத்தாமல் சர்வதேச கடன் உதவி பற்றி கனவு காண்பதில் பயனில்லை என அவர் தெரிவித்தார்.
கொழும்பு மார்க்ஸ் பெர்னாண்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர் மேலும் தெரிவித்ததாவது,
“இன்று எமது நாடு எதிர்நோக்கும் இந்த பொருளாதாரப் பேரழிவை எதிர்க்கட்சியில் உள்ள நாங்கள் ஒன்றரை வருடங்களாகப் பார்த்து வருகிறோம். அப்போதைய நிதியமைச்சர் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்த பிறகு இந்தப் பொருளாதார நெருக்கடி பற்றி வாய் திறக்கவே இல்லை. இப்போது நாட்டில் டொலரும் இல்லை, ரூபாயும் இல்லை.
டொலர்கள் எப்படிப் புழங்கும்
எனினும், நாட்டுக்குள் டொலர்கள் எப்படிப் புழங்கும் என்று அரசாங்கம் இன்னும் கனவு காண்கிறது. உலக வங்கியிடமிருந்து 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெறுவதாக அரசாங்கம் கூறியது. 24 மணி நேரத்திற்குள், உலக வங்கி அதை நிராகரித்தது. இலங்கைக்கு உதவிகளை வழங்குவது தொடர்பில் இதுவரை எந்த கலந்துரையாடலும் ஆரம்பிக்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நெருக்கடி தொடங்கி நீண்ட நாட்களாகிவிட்டது. ஒவ்வொரு நாளும் நாம் செய்தித்தாள்களைப் பார்க்கும்போது நம் நாட்டின் தலைவர்கள் பல்வேறு நாடுகளிடம் உதவி கேட்கிறார்கள். எவ்வாறாயினும், சில்லறை உதவிகளைத் தவிர, நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு எந்த உதவியும் இன்றுவரை காணப்படவில்லை.
உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட நிறுவனங்களின் அறிக்கைகளில் இருந்து இலங்கையிடமிருந்து இரண்டு விடயங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.
அவர்கள் நமது நாட்டில் பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் அரசியல் சீர்திருத்தங்களில் கவனம் செலுத்த எதிர்பார்க்கின்றனர். இந்த இரண்டு விடயங்களையும் வெற்றிகரமாக முடிக்காமல், எவ்வளவு கடன் கேட்டாலும், இந்த சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தப்படும்வரை சர்வதேசத்திடமிருந்து எங்களுக்கு கடன் கிடைக்காது என அவர் மேலும் தெரிவித்தார்.
