இலங்கைக் குழந்தைகளுக்கு வெளிநாட்டு மருத்துவக் குழுவினர் இலவச இதய அறுவை சிகிச்சை
சிக்கலான இதய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள 15 இலங்கைச் சிறுவர்களுக்கு இலவச இதய சத்திரசிகிச்சைகளை மேற்கொள்வதற்காக, ‘Take Heart Mercy Mission’ அமைப்பின் வெளிநாட்டு விசேட மருத்துவக் குழுவினர் காலி, கராப்பிட்டிய தேசிய வைத்தியசாலையில் விசேட மருத்துவத் திட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
இலங்கையில் மேற்கொள்வது சவாலானதாகக் கருதப்படும் இந்தச் சிக்கலான சத்திரசிகிச்சைகள், கராப்பிட்டிய தேசிய வைத்தியசாலையின் இதய மற்றும் மார்பக சத்திரசிகிச்சைப் பிரிவில், உள்ளூர் மருத்துவ நிபுணர்களின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படுகின்றன.
சுகாதாரப் பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி இன்று (22) வைத்தியசாலைக்கு விஜயம் செய்து, சத்திரசிகிச்சைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய மருத்துவ நடவடிக்கைகளைப் பார்வையிட்டார்.
வெளிநாட்டு மருத்துவக் குழுவினர்
இதன்போது, நடைபெற்று வந்த இதய சத்திரசிகிச்சையைப் பார்வையிட்ட அவர், சிறுவர் தீவிர சிகிச்சைப் பிரிவையும் ஆய்வு செய்தார்.

அங்கு, சிக்கலான சத்திரசிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்ட சிறுவர்களின் குணமடைதல் தொடர்பில் வெளிநாட்டு மருத்துவக் குழுவினர் அவருக்கு விளக்கமளித்தனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர், “கடந்த காலங்களில் இலங்கை மருத்துவர்களால் சில சிக்கலான இதய நோய்களைக் கண்டறிய முடிந்தபோதிலும், அவற்றுக்குத் தேவையான சத்திரசிகிச்சைகளை நாட்டிலேயே மேற்கொள்வதில் சவால்கள் காணப்பட்டது.
சரியான நேரத்தில் சத்திரசிகிச்சைகளை மேற்கொள்வதன் மூலம் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் வாழ்க்கையில் மட்டுமன்றி, அவர்களது குடும்பங்களின் எதிர்காலத்திலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும்.
இந்த மருத்துவத் திட்டம் உரிய அனுமதிகளைப் பெற்று, இலங்கையின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக முன்னெடுக்கப்படுகிறது, இதற்கான அனைத்து செலவுகளையும் தொண்டு நிறுவனம் ஏற்றுக்கொள்வதுடன், தேவையான மருத்துவ உபகரணங்களையும் வழங்குவதால் அரசாங்கத்துக்கு எந்தவித நிதிச் சுமையும் ஏற்படாது.
மேலும், சுகாதார அமைச்சின் திசு வங்கியிலிருந்து பெறப்பட்ட திசுவைப் பயன்படுத்தி, சிக்கலான இதயத் திசு மாற்று சிகிச்சையொன்று இன்று மேற்கொள்ளப்பட்டது.
இந்தத் திட்டத்தின் ஊடாக, சிக்கலான இதய சத்திரசிகிச்சைகளை மேற்கொள்வதில் இலங்கை மருத்துவ நிபுணர்கள் அனுபவம், தொழில்நுட்ப அறிவு மற்றும் விசேட திறன்களைப் பெற்றுக்கொள்ள சிறந்த வாய்ப்பு கிடைக்கிறது” என பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |