அருகம்பையில் காட்டு யானை தாக்குதல் - வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி படுகாயம்
அம்பாறை மாவட்டம், பொத்துவில் காவல் பிரிவுக்குட்பட்ட அருகம்பை சின்ன உள்ளை பகுதியில் காட்டு யானை தாக்கியதில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
நேற்று (28.09.2026) திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் காயமடைந்த சுற்றுலாப் பயணி உடனடியாக மீட்கப்பட்டு பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அருகம்பை மற்றும் சின்ன உள்ளை பகுதிகள் சர்வதேச ரீதியில் பிரபலமான சுற்றுலாத் தலங்களாக காணப்படுவதுடன், நாளாந்தம் அதிகளவான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் அங்கு வந்து செல்கின்றனர்.
வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி
இந்நிலையில், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள குடியிருப்பு மற்றும் சுற்றுலாப் பகுதிகளுக்குள் அண்மைக்காலமாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் அச்சநிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், அருகம்பை மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பயணிக்கும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், குடியிருப்பு மற்றும் சுற்றுலாப் பகுதிகளுக்குள் காட்டு யானைகள் ஊடுருவுவதைத் தடுக்க வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் பொலிஸாரும் உடனடியாக தலையிட்டு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |