கைதாகியிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் நீதிமன்றத்தால் விடுவிப்பு
இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டு இலங்கை வந்தடைந்ததும் கைது செய்யப்பட்ட, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவின் (TID) 72 மணி நேரத் தடுப்புக்காவல் மற்றும் விசாரணைக்குப் பின்னர், சந்தேக நபர் நேற்று (29) மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இந்த வழக்கு 2026, நவம்பர் 12ஆம் திகதியன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
கட்டுநாயக்கவில் கைது
யாழ்ப்பாணம், சாண்டிலிப்பாய், மசியப்பிட்டியைச் சேர்ந்த 50 வயதான சந்தேக நபர், ஒக்டோபர் 26ஆம் திகதி இரவு கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மறுசீரமைக்கும் முயற்சிகள் தொடர்பாக, சந்தேக நபர் இதற்கு முன்னர் 2015ஆம் ஆண்டில் இந்தியப் பாதுகாப்புப் படையால் கைது செய்யப்பட்டிருந்தார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
பின்னர், அவர் ஒரு இந்திய நீதிமன்றத்தால் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டு, 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். தனது சிறைத் தண்டனைக் காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, அவர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.
நாட்டை வந்தடைந்ததும் கைது செய்யப்பட்ட அவர், மேலதிக விசாரணைகளுக்காக 72 மணி நேரத் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |