முன்னாள் இராணுவ அதிகாரி சுட்டுக்கொலை : மூவர் அதிரடி கைது
காலி, ரத்கம - பூஸ்ஸ, மலியதூவ பிரதேசத்தில் முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 26ஆம் திகதி ரத்கம காவல்துறை பிரிவிற்குட்பட்ட மலியதூவ பிரதேசத்திலுள்ள பாழடைந்த காணியொன்றில் தலையில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலமொன்று மீட்கப்பட்டது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் காலி - ரிச்மண்ட் கந்த பகுதியைச் சேர்ந்த 47 வயதான நளின் துஷார டி சொய்சா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொலை
இந்தச் சம்பவம் தொடர்பில் காலி மாவட்ட குற்ற விசாரணைப் பணியகம் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில், கொலையுடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் மூவர் நேற்று (28) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிந்தோட்டை, மாகொல்ல மற்றும் காலி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 31, 38 மற்றும் 41 வயதுடைய சந்தேகநபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக ரத்கம காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கணேமுல்ல சஞ்சீவ கொலை
கொலை செய்யப்பட்ட குறித்த அதிகாரி மல்லாவி இராணுவ முகாமின் கட்டளை அதிகாரியாகக் கடமையாற்றிய காலத்தில், பிரபல பாதாள உலகக் குழுத் தலைவரான ‘கணேமுல்ல சஞ்சீவ’ கொலையின் பிரதான சந்தேகநபரான ‘கொமாண்டோ சலிந்த’ என்பவருக்கு 260 தோட்டாக்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் 2025 செப்டம்பர் 11ஆம் திகதி மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர், கடந்த 3ஆம் திகதி பிணையில் விடுதலையாகியிருந்தார். கடந்த 25ஆம் திகதி மாலை நண்பர்களுடன் இணைந்து காலி மஹாமோதர பகுதியில் மது அருந்திவிட்டு, ஜீப் வண்டியொன்றில் பூஸ்ஸ பகுதிக்குச் சென்ற போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஜீப் வண்டியிலிருந்து இறங்கிச் சென்ற அவரை, சுமார் 100 மீற்றர் தொலைவில் வைத்து இனந்தெரியாத நபர் ஒருவர் கைத்துப்பாக்கியால் தலையில் சுட்டுக் கொலை செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |