டித்வா புயலால் வேலையிழந்து அவதியுறும் மக்கள்: 14.8 பில்லியன் இழப்பு!
நாட்டில் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணிபுரிந்த 374,000 தொழிலாளர்களின் வேலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.
இவ்வாறு வேலையிழந்தவர்கள் தங்கள் வேலையை மீள ஆரம்பிக்க முடியாவிட்டால், அவர்கள் மாதத்திற்கு 14.8 பில்லியன் இலங்கை ரூபாயை இழக்க நேரிடும் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இவ்வாறு வேலை இழக்கும் அபாயத்தில் உள்ள தொழிலாளர்களில், 244,000 ஆண்கள் மற்றும் 130,000 பெண்கள் உள்ளடங்குவதாக அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வேலை இழப்பு
வேலை இழக்கும் அபாயத்தில் உள்ள தொழிலாளர்களில், 85,000 பேர் விவசாயம் தொடர்பான வேலைகளிலும், 125,000 பேர் தொழில்துறை வேலைகளிலும், மேலும் 164,000 பேர் சேவை தொடர்பான வேலைகளிலும் உள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.

குறித்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் வருமான இழப்பு அவர்களின் குடும்பங்களையும் பாதித்துள்ளதாகவும் இந்தக் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தங்கள் குழந்தைகளை வேலைக்கு அனுப்புவதில் கூட கவனம் செலுத்த வேண்டிய அபாயம் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டித்வா பேரழிவு காரணமாக விவசாயத் தொழில் மற்றும் கடற்றொழில் துறைகளில் மிகப்பெரிய தாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், நாட்டில் ஏற்பட்டுள்ள மண்சரிவுகள் மற்றும் வெள்ளத்தால் விவசாயத் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |