வீடு புகுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் மீது வாள்வெட்டு
வீடொன்றிற்குள் புகுந்த குண்டர்கள் குழு 13 வயதுடைய பாடசாலை மாணவன், அவனது தாய், தந்தை உட்பட நால்வரைக் வாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக ஊர்பொக்க காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
ஊர்பொக்க காவல்துறை பிரிவிற்குட்பட்ட பெங்கமுவ, தன்ஹேன, புஹுல்ஹேன்வலகட பிரதேசத்தில் உள்ள வீட்டிற்கு இரவு 9.00 மணியளவில் வந்த குழுவொன்று தாய், தந்தை, மகன் மற்றும் மகள் ஆகிய நால்வரையும் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
முச்சக்கர வண்டிகளில் வந்த குண்டர்கள் கும்பல்
முச்சக்கர வண்டிகளில் வந்த குண்டர்கள் கும்பல் முகத்தை மூடிக்கொண்டு வீட்டுக்குள் வந்து அவர்களை இவ்வாறு வெட்டியதுடன், 119 அவசர இலக்கத்திற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய காவல்துறைஅதிகாரிகள் குழுவொன்று ஸ்தலத்திற்கு வந்து காயமடைந்தவர்களை ஊருபொக்க ஹெய்கொட பிராந்திய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளது.
எம்பிலிப்பிட்டிய பொது வைத்தியசாலைக்கு
தாயும் மகனும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், மேலதிக சிகிச்சைக்காக எம்பிலிப்பிட்டிய பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
13 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரும் அவரது 51 வயதுடைய தந்தையும் 51 வயதுடைய தாயும் 17 வயதுடைய சகோதரியுமே காயமடைந்தவர்களாவர்.
