வயம்ப பல்கலைக்கழகத்தின் நான்கு மாணவர்களுக்கு விளக்கமறியல்!
வயம்ப பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவரை பகிடிவதைக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குறித்த பல்கலைக்கழகத்தை சேர்ந்த மூன்றாம் ஆண்டு மாணவர்கள் நால்வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர்களான நான்கு மாணவர்களும் இன்று (26.09) குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதன்படி, சந்தேகநபர்களை எதிர்வரும் 29 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அடையாள அணிவகுப்பு
வயம்ப பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டில் கல்வி கற்று வந்த கட்டுபொத்த, மாரக்கவிட்ட மற்றும் உக்குவெல ஆகிய இடங்களைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் ஆவர்.
சம்பவத்தில் தாக்கப்பட்ட மாணவர்கள் காயமடைந்து குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் ஏற்கனவே சிகிச்சை பெற்று வருவதாகவும், சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்புக்கு முன்னிலைப்படுத்த வேண்டும் எனவும் காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்களாக பெயரிடப்பட்ட மாணவர்களும், முறைப்பாட்டாளர்களும் ஒரே பல்கலைக்கழக மாணவர்கள் என்பதால், அவர்களை அடையாள அணிவகுப்புக்கு முன்னிலைப்படுத்த வேண்டிய அவசியமில்லை என சந்தேகநபர்களின் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த குளியாப்பிட்டிய நீதவான், நான்கு சந்தேகநபர்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
