பிரான்சில் வெடித்துள்ள போராட்டம் - கனடா விடுத்துள்ள எச்சரிக்கை
பிரான்சில் பெரும் கலவரம் வெடித்துள்ளதால், பிரான்ஸ் செல்லும் கனடா நாட்டவர்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை காலை, பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் புறநகர் பகுதியான Nanterre என்னுமிடத்தில், விதிகளை மீறியதாக ஒரு மகிழுந்தை காவல்துறையினர் நிறுத்தச் சொல்லியதாகவும், அந்தக் மகிழுந்தின் சாரதி நிறுத்தாமல் சென்றதாகவும் கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து, காவல்துறையினர் அந்தக் மகிழுந்தை ஓட்டிய சாரதியை சுட்டுக்கொன்றுள்ளனர். அந்த சாரதியின் பெயர் Nahel (17), அவர் அல்ஜீரியா மற்றும் மொராக்கோ பின்னணி கொண்டவர் என தெரியவந்துள்ளது.
அந்த இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து வெடித்த கலவரம் தொடர்பாக பாரீஸில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
கனேடியர்களுக்கு எச்சரிக்கை
இந்நிலையில் பிரான்சில் வெடித்துள்ள கலவரம் தொடர்பாக பிரான்ஸ் செல்லும் கனேடியர்களுக்கு கனடா பயண ஆலோசனை ஒன்றை வெளியிட்டுள்ளது. 2023, ஜூன் 27 முதல், பிரான்சில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.
மேலும் நாடு முழுவதும், பல நகரங்களில் பேரணிகளுக்கு திட்டமிடப்பட்டுவருகிறது. இதனால், போக்குவரத்து மற்றும் பொது சேவைகளுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது.
அதனால், சூறையாடல், தீவைப்பு மற்றும் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்குமிடையிலான வன்முறைகள் ஆகியவை நிகழ்ந்துவருகின்றன என்கிறது கனடா வெளியிட்டுள்ள அறிக்கை.
ஆகவே, பிரான்சுக்கு செல்லும் கனேடியர்கள் மிகவும் கவனமாக இருக்குமாறும், ஏற்கனவே பிரான்சிலிருக்கும் கனேடியர்கள் உள்ளூர் ஊடகங்கள் உதவியுடன், நடக்கும் விடயங்கள் குறித்து அவ்வப்போது தெரிந்து வைத்துக்கொள்ளுமாறும், உள்ளூர் அதிகாரிகளின் அறிவுரையின்படி பயணத்திட்டங்களை செயல்படுத்துமாறும் கனடா அரசு கனேடியர்களை அறிவுறுத்தியுள்ளது.