சிறிலங்காவிலுள்ள தமிழ் மக்களின் சுதந்திரம் பாதுகாக்கப்படுவதை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்
சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும், அவர்களது உரிமைகள் மற்றும் சுதந்திரம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்திடவும் சிறிலங்கா அதிபரை வலியுறுத்திட வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
சிறிலங்கா அதிபர் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையிலேயே முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த கடிதத்தை எழுதியுள்ளார்.
ஸ்டாலின் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்களாக ,
தமிழ் மக்களின் உரிமைகள்

''சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்களின் உரிமைகள், சுதந்திரம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய சிறிலங்கா அதிபரிடம் வலியுறுத்த வேண்டும்.
சிறிலங்கா தமிழர்களின் உரிமைகளை நிலைநிறுத்துவதிலும், கோரிக்கைகளை நிறைவேற்றுவதிலும் தமிழ்நாடு அரசும், தி.மு.கவும் உறுதியாக உள்ளது.
சிறிலங்காவில் உள்ள தமிழர்களின் சமூக, அரசியல், பண்பாடு மற்றும் பொருளாதார உரிமைகளைப் பாதுகாப்பது அவசியம்.
கடற்தொழில் படகுகள்

அத்துடன் சிறிலங்காவில் உள்ள தமிழர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற ஆக்கபூர்வமான, உறுதியான தீர்வை எட்ட சிறிலங்கா அதிபரிடம் பிரதமர் வலியுறுத்த வேண்டும் .
மேலும், சிறிலங்கா கடற்படையால் இந்திய கடற்தொழிலாளர்கள் தாக்கப்படுவது, கைது செய்யப்படுவது குறித்து சிறிலங்கா அதிபரிடம் எடுத்துச் சென்று, சிறைப்பிடிக்கப்பட்ட கடற்தொழில் படகுகளை நாட்டுடைமையாக்கும் சட்டத்தைத் திரும்பப் பெற தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்''
எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் அந்தக் கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.