எங்களது கட்சித் தலைவராகவே மகிந்த போரில் வெற்றி பெற்றார்! மார் தட்டும் சுதந்திரக் கட்சி
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவே மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) நாட்டிற்கு போர் வெற்றியை பெற்றுக்கொடுத்ததாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க (Duminda Dissanayake) தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் மிகிந்தலையில் நடைபெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அதிகார சபையின் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
கட்சியுடன் முரண்பட்டு, சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகிச் சென்ற அனைவரும் கட்சிக்குள் மீண்டும் திரும்பி வருவதற்காக கட்சியின் கதவுகள் திறந்திருக்கும். கட்சியை விட்டு சென்ற அனைவரும் தமது தாய் வீட்டுக்கு வர வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் இருப்பவர்களுக்கும் தமது தாய் வீடு எது என்பது நினைவில் இருக்கும்'
சிலர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியை துச்சம் என மதிக்கின்றனர்.இவர்கள் எவராலும் கட்சியை பலவீனப்படுத்த முடியாது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அளவுக்கு நாட்டிற்கு வெற்றிகளை தேடி கொடுத்த கட்சி எதுவுமில்லை.
கடந்த அரச தலைவர் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவின் வெற்றிக்காக மாத்திரமல்லாது பொதுத் தேர்தலில் வெற்றிப் பெறவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி, கூட்டணிக் கட்சியாக பொதுஜன பெரமுனவுக்குள் வந்தது.
உடன்படிக்கையில் கையெழுத்திட்டே கட்சி கூட்டணிக்குள் சென்றது. இதனால், அரசாங்கத்திற்குள் இருந்தாலும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு தனித்து அரசியலில் ஈடுபடும் உரிமையுள்ளது.
இந்த உரிமையை எவரும் தடுத்து விட முடியாது. அத்துடன் சிறிலங்கா சுதந்திரக் கட்சியை வலுப்படுத்தும் வேலைத்திட்டங்களையும் எவரும் தடுக்க முடியாது என தெரிவித்துள்ளார்