சுமண ரத்தின தேரருக்கு சுதந்திரம்… பல்கலைக்கழக மாணவர்களுக்கு சிறை…
மட்டக்களப்பு மயிலத்தமடு மேய்ச்சல் தரை உரிமைக்காக போராடச் சென்ற யாழ் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று அண்மையில் இடம்பெற்றிருந்தது.
ஒரு புறத்தில் யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை அகற்றுவதற்கான முயற்சிகள் நடக்கின்றன என்ற செய்திகள் வெளியாகியிருக்கும் சூழலில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள்மீது மேற்கொள்ளப்பட்ட கைது சம்பவம் பல்வேறு செய்திகளை சொல்லிச் செல்கிறது.
மாணவர்களின் கைகளில் விலங்கைத் தொடுத்து, அவர்களை சிறையில் அடைக்க முற்படுகிற நாடு என்பது ஜனநயாகத்திற்கு எத்தகைய இடத்தை வழங்குகிறது?
மயிலத்தமடுவில் தொடரும் போராட்டம்
மட்டக்களப்பு மயிலத்தமடுவில் மேய்ச்சல் தரைகளில் காலம் காலமாக கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வரும் பண்ணையாளர்களும் தொழிலாளர்களும் தமது தொழில் நடவடிக்கையை அங்கு மேற்கொள்ள முடியாத பாரிய அச்சுறுத்தல் நிலைமையை எதிர்கொண்டுள்ளனர்.
மட்டக்களப்பு செங்கலடி மற்றும் கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் எல்லையில் உள்ள மேய்ச்சல் தரைப் பிரதேசமான மயிலத்தமடுவில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட முடியாத அளவுக்கு பேரினவாதிகள் இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறார்கள்.
கால்நடைகளை தாக்கி அவைகளை கொல்லுகின்ற அளவுக்கு அங்கு மிகக் கொடிய அளவில் பேரினவாத ஆக்கிரமிப்பு தலைவிரித்தாடுகிறது. அத்துடன் மக்களுக்கு மாத்திரமின்றி பசுக்கள்மீதும் வன்முறைகளை பிரயோகிக்கும் இச் செயற்பாடுகளின் பின்னால் அரசியல்வாதிகளும் சில தேரர்களும் இருக்கின்றனர்.
அண்மையில் மட்டக்களப்பில் அனைத்து தமிழர்களையும் வெட்டுவேன் என்று அம்பிட்டிய சுமண ரத்தின தேரர் பகிரங்கமாக அச்சுறுத்தல் விடுத்திருந்தமையை ஊடகங்களில் கண்டோம்.
ஈழத் தமிழ் மக்களின் நிலத்தில் வந்து நின்று அவர்களின் நிலத்தை ஆக்கிரமிக்க அவர்களை வெட்டிக் கொல்லுவேன் என்று பெரும் வன்முறைக்கு நிகராக வார்த்தைகளில் வன்முறையை அம்பிட்டிய சுமணரத்தின தேரர் நிகழ்த்தியுள்ளார்.
ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டம்
போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 14 ஆண்டுகள் ஆகின்ற நிலையில் வடக்கு கிழக்கு எங்கும் அங்காங்கே ஆக்கிரமிப்பு வேலையை சிங்களப் பேரினவாதிகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றனர்.
வடக்கில் குருந்தூர் மலையிலும், செம்மலையிலும், தையிட்டியிலும், உருத்திரபுரீச்சரத்திலும், கன்னியா வெந்நீரூற்றிலும் இன்னும் பல இடங்களிலும் ஆக்கிரமிப்பு முயற்சிகளை மேற்கொண்டு தமிழ் மக்களின் நிம்மதியை குலைத்து வருகின்றனர்.
இதனால்தான் வடக்கு கிழக்கு போர் மயமாகியுள்ளது. ஒவ்வொரு ஆக்கிரமிப்பு முயற்சிகளும் இடம்பெறும் போதும் தமிழ் மக்கள் அதற்கு எதிராக கிளர்ந்தெழுகின்றனர். சில தருணங்களில் வடக்கு கிழக்கு முழுமையாக வெகுண்டெழுந்தும் போராடுகிறது.
சில தருணங்களில் குருந்தூர் மலை போல ஆக்கிரமிப்பு முயற்சியை தடுக்க முடியாத கையறு நிலைக்கும் ஈழத் தமிழ் மக்கள் ஆளாகியும் வருகின்றனர்.
இந்த நிலையில் மட்டக்களப்பு, கால்நடை வளர்ப்புக்கு பெயர் பெற்ற மாவட்டம். மட்டக்களப்புக்கு மாத்திரமின்றி, கிழக்கிற்கும் வடக்கு கிழக்கிற்கும் இலங்கைத் தீவிற்கும் கால்நடை வளர்ப்பின் வாயிலாக பொருளாதார வளத்தை ஈட்டும் வகையில் அமைந்தது மயிலத்தடு பிரதேசம்.
இந்த நிலையில் காலம் காலமாக பாரம்பரியமாக அங்கு தொழிலில் ஈடுட்டு வரும் பண்ணையாளர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் பேரினவாதிகள் இடையூகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் அங்கு இயல்பான போராட்டம் வெடிப்பது மிகவும் நியாயமானது.
அண்மையில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் குறித்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியுள்ள நிலையில், வடக்கில் இருந்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் அறுபதுபேர் அடங்கிய போராட்டக் குழுவினர் அங்கு சென்று தமது பூரண ஆதரவை தெரிவித்திருந்தனர்.
வடக்கு கிழக்கு தமிழர் தாயகமே
கடந்த காலத்தில் இதுபோன்ற முன்னூதாரணமான செயற்பாடுகளில் கிழக்கு பல்கலைக்கழகமும் யாழ் பல்கலைக்கழகமும் செயற்பட்டிருக்கின்றன. 2010களில் கிழக்கில் மாபெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மக்கள் பெரும் இடர்பாடுகளுக்கு முகம் கொடுத்த வேளையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கிழக்கிற்கு சென்று பல்வேறு நிவாரணப் பணிகளிலும் உதவிகளிலும் தம்மை ஈடுபடுத்தினர்.
வடக்கு கிழக்கு என்பது தமிழர்கள் மரபுவழித் தாயகம். வடக்கிற்காக கிழக்கும் கிழக்கிற்காக வடக்கும் குரல் கொடுப்பதும் களப்பணி புரிவதும் பாரம்பரிய உரிமையும் உறவின் தொடர்ச்சியுமாகும்.
இதேவேளை வடக்கு கிழக்கு என்பது தமிழர்களின் தாயகம் என்று ஈழத் தமிழ் மக்கள் மாத்திரம் சொல்லவும் வெளிப்படுத்தவும் இல்லை. இலங்கை அரசும், சிங்களப் பேரினவாதிகளும்கூட அதனையே சொல்லியும் வெளிப்படுத்தியும் வருகின்றனர்.
வடக்கில் தொடரும் அநீதிகளுக்கு இணையாக கிழக்கிலும் அதேபோன்ற அநீதிகளை தொடர்வதன் வாயிலாகவும் வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம் என்பதையும் வடக்கும் கிழக்கும் சட்ட ரீதியாக பிரிக்கப்பட்ட போதும் பிரச்சினை ரீதியாகவும் பாரம்பரியாகவும் உறவு ரீதியாகவும் பிரிக்கப்பட்ட நிலப்பகுதியல்ல என்பதையும் அரசும் பேரினவாதிகளும் இதுபோன்ற ஆக்கிரமிப்புகள் அடாவடிகள் வாயிலாக உணர்த்திச் செல்கின்றனர்.
மாணவர்கள் மீதான எச்சரிக்கையா?
இந்த நிலையில் வடக்கில் இருந்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், மயிலத்தமடு நில உரிமைக்காக போராடும் மக்களுக்கு ஆதரவு வழங்கச் சென்ற வேளையில் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்திவெளிக் காவல்துறையால் கைதுசெய்யப்பட்ட நிலையில், 24 மணிநேரங்களை கடந்தும் மாணவர்கள் சிறையில் வைக்கப்பட்ட பின்னரே அவர்கள் பிணைவழியாகவும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
யாழ் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளுடன் கிழக்கு பல்கலைக்கழக மாணவப் பிரதிநிதி ஒருவரும் இதில் கைது செய்யப்பட்டிருந்தார்.
வடக்கு கிழக்கு மாணவர்கள் இணைந்து போராடக்கூடாது என்பதையும் வடக்கு கிழக்கு மக்கள் இணைந்து போராடக்கூடாது என்பதையும்தான் இந்த கைது வழியாக விடுக்கப்படுகிற எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.
வடக்கு கிழக்கில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு எப்போதுமே அரசியல் ரீதியாக பெறுமதி உண்டு. அவை வடக்கு கிழக்கு மக்கள்மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக கடுமையாக குரல் கொடுத்துள்ளன. ஈழவிடுதலைப் போராட்டத்திலும் பங்களித்துள்ளன.
இதனால் தமது உயிர்களை இழந்த மாணவர்களும் மாணவத் தலைவர்களும் உண்டு. இதனால் பல்வேறு அச்சுறுத்தல்கள், தாக்குதல்களுக்கு உள்ளான பல்கலைக்கழக ஆசிரியர் சமூகமும் உண்டு.
அத்துடன் எமது பல்கலைக்கழங்களில் மிகப் பெரிய இனப்படுகொலைகளும் மனித உரிமை மீறல்களும் நடந்த வரலாறுகளையும் கண்டிருக்கிறோம். இந்த நிலையில் மாணவர் சமூகத்தின் குரலை அடக்கி ஒடுக்கவே இந்த கைது நடைபெற்றதா என்ற சந்தேகம் எழுவது இயல்பானதே.
சுமணரத்தின தேரருக்கு சுதந்திரம்…
இங்கே மாபெரும் செய்தி ஒன்றும் புலப்பட்டு நிற்கிறது. கடந்த வாரங்களில் அனைத்து தமிழர்களையும் வெட்டுவேன் என்று கூறிய சுமரண ரத்தின தேரர் சுதந்திரமாக நடமாடுகிறார்.
போராடும் மக்களுக்கு எதிராகவும் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரநிதிகளுக்கு எதிராகவும் வன்முறை சொற்களைப் பிரயோகிக்கும் சுமரண ரத்தின தேரருக்கு வழங்கப்படும் சுதந்திரம் எதனை உணர்த்துகிறது?
சுமரண ரத்தின தேரர் ஒரு சிங்களவராக இருப்பதனால் எப்படியும் நடந்துகொள்ள முடியுமா? எந்த வார்த்தைகளையும் பிரயாகிக்க முடியுமா? யாழ் பல்கலைக்கழக மாணவர்களும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும் மயிலத்தமடு மக்களுக்கு ஆதரவாக வந்த தமிழர்கள் என்பதால்தான் கைது செய்யப்பட்டனரா? இதுவே இக் கைது உணர்த்துகிற செய்தி.
இலங்கைத் தீவு இன்னமும் பொருளாதார ரீதியாக இறுகிக் கொண்டிருக்கிறது. பொருட்களின் விலையேற்றம் இன்னமும் கூடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையிலும்கூட ஆக்கிரமிப்பும் குறைந்தபாடில்லை. பாரபட்சமும் குறைந்தபாடில்லை. தமிழர்களுக்கு அநீதி, சிங்களவர்களுக்கு வேறு நீதி என்ற வகையில்தான் இலங்கைத் தீவின் நிலைமை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
பொருளதார நெருக்கடி மத்தியிலும் தீவிரம் குறையாத இந்தப் பேரினவாத சூழலில் தமிழ் மக்கள் எப்படி வாழ்வது? எப்படி நீதியை எதிபார்ப்பது? பொருளதார நெருக்கடி மத்தியிலும் தீவிரம் குறையாத இந்தப் பாரபட்சச் சூழலில் தமிழ் மக்கள் எப்படி வாழ்வது? எப்படி நீதியை எதிபார்ப்பது?
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 09 November, 2023 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.