முடிவுக்கு வருகிறது ஐபோன் 12 மீதான பிரான்ஸின் நாடகம் : புதுப்பிக்கப்பட்ட மென்பொருள் அறிமுகம்
ஐபோன் 12 சந்தையில் அறிமுகமாகி 3 ஆண்டுகள் ஆனதன் பின்னர் அரசு விதித்திருக்கும் சட்டபூர்வமான கதிர்வீச்சு வரம்புகளை மீறுகின்ற வகையில் இந்த போன் தயாரிக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அறிவித்திருந்தது.
அதன்படி ஐபோன் 12 இன் உற்பத்தியை நிறுத்தும்படியும் அதன் விற்பனையை தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தது.
இந்த பிரச்சினைக்கு தீர்வுகாணும் முகமாக அப்பிள் நிறுவனம் புதுப்பிக்கப்பட்ட மென்பொருள் ஒன்றை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.
கதிர்வீச்சு அதிர்வெண்கள்
இந்த மென்பொருளை பிரான்ஸ் சோதித்து வருவதாகவும், கதிர்வீச்சு என்ற சொல்லை பயன்படுத்தி பிரான்ஸ் நாடகமாடி வருவதாகவும் அப்பிள் நிறுவனம் இந்த செயலை விளக்கியுள்ளது.
ஸ்மார்ட்போன்களில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சு அலைகள் மனித இழையங்களில் வெப்பத்தை ஏற்படுத்தும், இது உடல் நலத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கின்றது.
அதனால் மனித இழையங்களுக்கு பாதிப்பு ஏற்படாதவகையில் கதிர்வீச்சு அதிர்வெண்கள் வரையறுக்கப்பட்டு அதன் பிரகாரம் ஸ்மார்ட்போன்கள் உற்பத்தி செய்யப்படவேண்டும் என்று சட்டம் ஒன்று இயற்றப்பட்டது.
அதன்படி ஐபோன் 12 அறிமுகப்படுத்தப்பட்ட போது கூட அது கதிர்வீச்சு அதிர்வெண் சோதனைகளில் தேர்ச்சி பெற்றிருந்தது.
வித்தியாசமான சோதனை முறை
அப்படியிருக்கையில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கதிர்வீச்சு அதிர்வெண் சோதனைகளில் தோல்வியடைந்திருப்பதாக கூறுவதை அப்பிள் நிறுவனம் ஒரு பின்னடைவாகவே கருதுகிறது.
ஐபோன் 12 மீது கதிர்வீச்சு சட்ட வரம்புகளை மீறியதாக பிரான்ஸ் மட்டுமே குற்றம் சாட்டியுள்ளது, அது உண்மையாக இருந்திருந்தால் மற்றைய பிரதேசங்களிலும் அது கண்டறியப்பட்டிருக்கும் அல்லவா எனவே பிரான்ஸ் மற்றைய நாடுகளைக் காட்டிலும் வித்தியாசமான சோதனை முறையைப் பயன்படுத்தியிருக்கிறது அதனால் தான், இந்த சோதனைகளில் வித்தியாசமான முடிவு கிடைத்துள்ளது என்று அப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் அதற்கு தீர்வு காணும் வகையில் ஐபோன் 12 க்கான புதுப்பிக்கப்பட்ட மென்பொருள் ஒன்றினை அறிமுகப்படுத்தி பிரச்சினையை எளிதாக தீர்த்துள்ளது.
அப்பிள் இப்போது இந்த புதுப்பிப்பினை கதிர்வீச்சு அதிர்வெண் சோதனைகளுக்கு சமர்ப்பித்துள்ளது, இதனால் சோதனைகள் மீண்டும் நடத்தப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.
சுகாதார அபாயங்கள்
பிரெஞ்சு அதிகாரிகளும் ஐபோன் 12 க்கான மென்பொருள் புதுப்பிப்பைப் பெற்றுள்ளனர் மேலும் அதனை மதிப்பாய்வு செய்தும் வருகின்றனர்.
அதன் படி ஐபோன் 12 ற்கு எந்தவொரு சுகாதார அபாயங்கள் இருப்பதாக எந்த ஆதாரமும் இதுவரை கண்டறியப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இது பெரிய பிரச்சினை இல்லை என்றும் புதுப்பிக்கப்பட்ட மென்பொருள் மூலம் இதனை எளிதாக தீர்க்க முடியும் என்றும் அப்பிள் நிறுவனம் உறுதியளித்துள்ளது.