இலங்கைக்கான எரிபொருள் இறக்குமதிச் செலவு பாரியளவில் அதிகரிப்பு
உலக சந்தையில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் கடந்த சில மாதங்களில் எரிபொருளை இறக்குமதி செய்வதற்காகப் மிகப்பெரிய தொகையைச் செலவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டு மே 6 மற்றும் மே 10 ஆகிய திகதிகளில் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தனது அண்மைய இரண்டு டீசல் கப்பல்களையும் பொறுப்பேற்றுள்ளதுடன், அடுத்த சில வாரங்களுக்கு புதிய கப்பல்கள் எதுவும் வருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டிற்குத் தேவையான எரிபொருள் இருப்பு தற்போதைக்கு போதுமானதாக உள்ள போதிலும், கொள்வனவுச் செலவுகள் தொடர்ந்து உயர் மட்டத்திலேயே காணப்படுவதாக கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூரா நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்
அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் உலக சந்தையில் ஏற்பட்ட விலையேற்றம் காரணமாக, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மிக அதிக விலைக்கு டீசலைக் கொள்வனவு செய்ய வேண்டியிருந்தது.

ஏப்ரல் முதல் வாரத்தில் 38,814 பீப்பாய் சுப்பர் டீசல், பீப்பாய் ஒன்று 303.76 அமெரிக்க டொலர் என்ற மிக உயர்ந்த விலைக்குக் கொள்வனவு செய்யப்பட்டதுடன் அதே வாரத்தில் 293,804 பீப்பாய் டீசல் (பீப்பாய் 289.47 டொலர்) மற்றும் 254,219 பீப்பாய் டீசல் (பீப்பாய் 281.87 டொலர்) என்ற விலைகளில் இறக்குமதி செய்யப்பட்டன.
ஒட்டுமொத்தமாக மார்ச் மாதம் முதல் மே மாத முற்பகுதி வரை, டீசல் இறக்குமதிக்கான விலை பீப்பாய் ஒன்றுக்கு 172.74 டொலர் முதல் 303.76 டொலர் என்ற உயர் எல்லை வரை பதிவாகியிருந்தது.
பெட்ரோல் இறக்குமதி
டீசலுடன் ஒப்பிடுகையில் பெட்ரோல் இறக்குமதிச் செலவு சற்றுக் குறைவாகக் காணப்பட்டது. ஏப்ரல் இறுதி வாரத்தில் ஒரு பீப்பாய் பெட்ரோல் 92 இன் அதிகூடிய விலை 153.70 டொலராகவும், குறைந்தபட்ச விலை 130.89 டொலராகவும் (312,899 பீப்பாய்களுக்கு) காணப்பட்டது.

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பெட்ரோல் 95 இரண்டு கப்பல்கள் மாத்திரமே வந்தடைந்தன. அவை முறையே பீப்பாய் ஒன்று 143.53 டொலர் மற்றும் 154.72 டொலர் என்ற விலைகளில் கொள்வனவு செய்யப்பட்டது” என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |