இடை நிறுத்தப்பட்ட எரிபொருள் விநியோகம்! மீண்டும் வரிசை யுகம்
மீண்டும் நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய தனியார் கொள்கலன் உரிமையாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் டி.வி.சாந்த சில்வா தெரிவித்துள்ளார்.
பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திடம் டீசல் மற்றும் பெட்ரோல் ஆகிய இரண்டு இருப்பும் இல்லாத காரணத்தால் பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
இதனால் மீண்டும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் மீண்டும் நீண்ட வரிசைகள் உருவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, முத்துராஜவெல பெட்ரோலிய முனையத்திலிருந்து பெட்ரோல், டீசல் விநியோகங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் சாந்த சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.
எரிபொருள் தட்டுப்பாடுகளால் நாளை (26) முதல் தனியார் பஸ் சேவைகள் 50 வீதம் குறைவடையும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
எரிசக்தி அமைச்சு வெளியிட்ட தகவல்கள்
இந்நிலையில், அடுத்த இரண்டு நாட்களில் மற்றுமொரு டீசல் கப்பல் நாட்டை வந்தடைய உள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், 33,000 மெற்றிக் தொன் 92 ரக ஒக்டேன் பெட்ரோல் கப்பல் ஒன்றும் எதிர்வரும் 27 மற்றும் 29ஆம் திகதிகளில் இலங்கைக்கு வரவுள்ளது.
அதேவேளை, நாட்டை வந்தடைந்த 30,000 மெற்றிக் தொன் சுப்பர் டீசல் கப்பலில் இருந்து தரையிறக்கும் பணிகள் இடம்பெறவுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.