பேருந்துக் கட்டணத்தில் மாற்றமில்லை : வெளியான அறிவிப்பு
எரிபொருள் விலை திருத்தத்தின் பிரகாரம் டீசல் விலை அதிகரிக்கப்பட்டாலும் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன (Gemunu Wijeratne) தெரிவித்துள்ளார்.
அத்துடன் எரிபொருள் விலை குறைக்கப்படும் என தங்களது தரப்பு எதிர்பார்த்திருந்ததாகவும் எனினும் அவ்வாறு இடம்பெறவில்லை என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,” டீசல் விலை அதிகரிக்கப்பட்டாலும் பேருந்து பயணக் கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது. அந்த சலுகை மக்களை சென்றடைவதை நாம் உறுதி செய்வோம். இருப்பினும் 3 ரூபா நட்டத்திலேயே பேருந்து கட்டணம் அறவிடப்படுகிறது“ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம்
இதேவேளை அரசாங்கம் எதிர்க்கட்சியில் இருந்த போது கூறிய விதத்தில் எரிபொருள் விலையை குறைக்கவில்லை என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் (Colombo) இன்று (01) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த அந்த சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பெட்ரோலின் விலையை அதிகரிக்காமல் இருந்தமையை நாம் வரவேற்கின்றோம். முன்னாள் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் (Kanchana Wijesekera) கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்துக்கு அமைய எரிபொருள் விலையை குறைக்க முடியாதென ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் தற்போது கூறுகின்றது என சுட்டிக்காட்டியுள்ளார்.
எரிபொருள் விலை திருத்தம்
எனவே, எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டாலும் பரவாயில்லை, குறைக்கப்பட்டாலும் பரவாயில்லை இவ்வாறான கருத்துக்களை மாத்திரம் கூற வேண்டாம் என லலித் தர்மசேகர குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்துக்கு அமைய, நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில், எரிபொருட்களின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 18 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, 331 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ள நிலையில் ஏனைய எரிபொருட்களின் விலையில் மாற்றம் மேற்கொள்ளாதிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |