5 மணிநேர வாக்குமூலம் : சி.ஐ.டியிலிருந்து வெளியேறிய எரிபொருள் விநியோகஸ்தர்கள்
புதிய இணைப்பு
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வந்த எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் பிரதித் தலைவர் குசும் சந்தனாயக்க மற்றும் பணிப்பாளர் குழு உறுப்பினர் சாந்த சில்வா ஆகியோர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
வாக்குமூலங்களை வழங்கிய 5 மணி நேரத்திற்குப் பிறகு இருவரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.
அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கும் நோக்கில், எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை சீர்குலைக்க இந்த பிரதிநிதிகள் முயற்சிப்பதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இருவரும் இன்று (04) குற்றப் புலனாய்வுத் துறையில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
எரிபொருள் விநியோகஸ்தர்கள் (Fuel Distributors) சங்கத்திற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் (CID) அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தை இன்று (04) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அந்த சங்கத்தின் துணைத் தலைவர் குசும் சந்தநாயக்க (Kusum Sandanayaka) மற்றும் சாந்த சில்வா (Shanta Silva) உள்ளிட்ட பணிபபாளர்கள் குழுவை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
அரசாங்கத்தை அவமானப்படுத்தும் நோக்கில், எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை சீர்குலைக்க இந்த பிரதிநிதிகள் முயற்சிப்பதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் காவல்துறை ஊடகப்பிரிவு நேற்று (03) அறிவித்திருந்தது.
இதேவேளை நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் (CPC) அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
