வவுனியாவில் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இரவு நேரத்தில் பூட்டு
வவுனியா வவுனியா நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இரவு நேரத்தில் மூடப்படுவதால் பயணிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
வவுனியா பல்வேறு மாவட்டங்களின் நுழைவாயிலாக காணப்படுவதால் பலரும் தமது வாகனங்களுக்கு வவுனியாவில் எரிபொருளை பெறும் நோக்கோடு வருகின்றனர்.
மக்களை முட்டாளாக்கும் செயல்
எனினும் நகர்ப் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இரவு 7 மணியுடன் மூடப்பட்டு மறுநாள் காலை 8 மணிக்கே திறக்கப்படுவதால் தூர இடத்து பயணிகள் மற்றும் அவசர தேவையின் பொருட்டு பயணிப்பவர்களும் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
24 மணி நேர சேவை என விளம்பரப்படுத்தப்பட்டு கியூ ஆர் முறையில் எரிபொருளை வழங்கப்பட்டு வரும் நிலையில், இரவு நேரத்தில் நிலையத்தை மூடுவது தொடர்பில் பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.
இரவு நேரத்தில் எரிபொருளை கோரும் போது எரிபொருள் முடிவடைந்துவிட்டது எனத் தெரிவிக்கும் ஊழியர்கள் காலையில் எவ்வித எரிபொருள் தாங்கிகளும் வராத நிலையில் எரிபொருளை மீள வழங்குவதானது மக்களை முட்டாளாக்கும் செயலெனவும் பயணிகள் விசனம் தெரிவித்தனர்.
