காலியில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டல் ஊழியர்களுக்கு கொரோனா
காலியில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டல் ஊழியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக காலி சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த இருவரும் காலி மற்றும் கேகாலையைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் இருவரும் ஹோட்டலின் சமையலறை மற்றும் சலவை வேலை செய்பவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
நேற்றுமுன்தினம் சமையலறையில் வேலை செய்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் ஹோட்டலில் பணியாற்றிய 98 பணியாளர்களுக்கு பி சி ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
கொரோனா தொற்றுக்குள்ளான இருவரையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தொற்றுக்குள்ளான இரண்டு பணியாளர்களும் இங்கிலாந்து வீரர்களுடன் நேரடியாக தொடர்புகளை பேணவில்லை என ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எனினும் குறித்த தொழிலாளர்களுக்கு எவ்வாறு கொரோனா தொற்றியது மற்றும் அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்களை கண்டுபிடிக்கவும் பொது சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணியுடனான போட்டிகளுக்காக இங்கிலாந்து அணி இலங்கை வந்துள்ளமையும் காலி சர்வதேச மைதானத்தில் இன்று நிறைவடைந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.