காலிமுகத்திடல் தாக்குதல் - ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தொடர்பில் சட்டமா அதிபர் விடுத்த அறிவிப்பு
கோட்டா கோ கம தாக்குதல்
பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ மற்றும் மஹிந்த கஹந்தகம உட்பட 4 பேர் காலிமுகத்திடல் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.
கொழும்பில் அலரிமாளிகைக்கு அருகாமையிலும் காலி முகத்திடலிலும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அவர்கள் சந்தேகநபர்களாக பெயரிடப்படவுள்ளதாக சட்டமா அதிபர் கோட்டை நீதவான் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, நாமல் ராஜபக்ச, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 14 பேருக்கு எதிராக நீதிமன்றத்தினால் ஏற்கனவே பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
விளக்கமறியல்
இதேவேளை இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த மற்றும் மிலான் ஜயதிலக்க மற்றும் 11 சந்தேகநபர்களும் ஜூன் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது குற்றப் புலனாய்வுப் பிரிவினர், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினரின் சட்டத்தரணிகள் ஆகியோர் முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
