காலிமுகத்திடல் போராட்ட கள தாக்குதல் - நடந்தது என்ன ...! வெளிவந்த அதிர்ச்சி தகவல் (படங்கள்)
காலிமுகத்திடல் போராட்டகாரர்கள் மீதான தாக்குதலைத் தடுப்பதற்காக தாம் வகுத்த விசேட பாதுகாப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டாமென பாதுகாப்புப் படையில் கடமையாற்றும் இரண்டு சிரேஷ்ட அதிகாரிகள் கடும் அழுத்தங்களை பிரயோகித்ததாக மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தெரிவித்துள்ளார்.
இந்த விசேட பாதுகாப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அனுமதிக்காத காரணத்தினால் காலிமுகத்திடலில் இருந்த மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தென்னக்கோனின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலி முகத்திடல் போராட்ட மைதானத்தில் தாக்குதல் நடத்த வந்தவர்கள் மீது கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகிக்க வேண்டாம் என இந்த சிரேஷ்ட அதிகாரிகள் தம்மை அழைத்து அழுத்தம் கொடுத்ததாக சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் தெரிவித்துள்ளார்.
ஆரம்பம் முதலே காலிமுகத்திடலுக்கு பேரணியாக செல்வதை தவிர்க்குமாறு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ அலரிமாளிகையில் உள்ளவர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்களை அந்தப் பகுதிக்குள் நுழையவிடாமல் தடுத்து வேறு பாதையில் அனுப்புமாறு தேசபந்து தென்னக்கோனுக்கு அரச தலைவர் பலமுறை பணிப்புரை விடுத்துள்ளார். அதன் பிரகாரம், தேசபந்து தென்னக்கோன் மற்றும் ஏனைய காவல்துறை உத்தியோகத்தர்கள் அலரிமாளிகையிலிருந்து வெளியேறிய குழுவினரை நவம் மாவத்தை வழியாக அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளனர்.
எவ்வாறாயினும், முன்னாள் பிரதி அமைச்சர் சனத் நிஷாந்த உட்பட பெருந்தொகையான மக்கள் காலி வீதியூடாக மைனாகோகம மற்றும் கோட்டாகோகம நோக்கி பயணித்திருந்தனர். தேசபந்து தென்னகோன் அவர்கள் குழுவை காலி முகத்திடலை நோக்கிச் செல்வதைத் தடுக்க பலத்த முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். காலி முகத்திடல் மைதானத்திற்குள் நுழைவதற்கு முன்னர் குழுவை கலைக்க இரண்டு குழுக்கள் நீர் பீரங்கி மற்றும் கலகப் படைகள் வரவழைக்கப்பட்டன.
மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தேசபந்து தென்னக்கோன் வழங்கிய வாக்குமூலங்களின்படி, நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவுடன் தனிப்பட்ட முறையில் பேசி இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டாம் என பணிப்புரை விடுத்துள்ளார்.
எவ்வாறாயினும், குறித்த குழுவினர் காலி முகத்திடலை நோக்கி பேரணியாக சென்றதையடுத்து, அவர்களை கலைக்க காவல்துறையினர் தயாராக இருந்தனர். அப்போது, தேசபந்து தென்னக்கோனை கையடக்கத் தொலைபேசியில் அழைத்த உயர் பாதுகாப்பு அதிகாரி ஒருவர், குழுவைக் கலைக்க நீர்த்தாரையோ, கண்ணீர் புகைக் குண்டுகளையோ பயன்படுத்த வேண்டாம் என்று உத்தரவிட்டுள்ளார்.
கலவரக்காரர்களை தடுக்க காவல்துறையினர் கடுமையாக முயன்றும், அதை செயல்படுத்த முடியவில்லை. காலி முகத்திடல் மைதானத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மனிதாபிமானமற்ற முறையில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் அரச தலைவருக்கு அறிவித்துள்ளதாக தென்னக்கோன் குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மோதலை கட்டுப்படுத்துவதற்கும் போராட்டக்காரர்களை கலைப்பதற்கும் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்துமாறு அரச தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
காலி முகத்திடல் போராட்டப் பகுதியில் இடம்பெற்ற மோதல்களின் போது அரச தலைவரின் அறிவுறுத்தலின் பேரில் காவல்துறையினர் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை பிரயோகித்ததாக தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.