தொடரும் போராட்டம்; விடைகொடுக்கா அரசாங்கம் - 28 ஆவது நாளாக தொடர்கிறது காலி முகத்திடலில் மக்களின் எழுச்சி
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பு காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டம் இன்றுடன் 28 ஆவது நாளாகவும் தொடர்கிறது.
இவ் ஆர்ப்பாட்டத்திற்கு நாளாந்தம் பல்வேறு தரப்பினராலும் ஆதரவு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் குறித்த ஆர்ப்பாட்டப்பகுதியில் காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் 6 பேரின் புகைப்படங்களுடன் கூடிய பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
அவை கடந்த வாரம் பொலிஸாரினால் அங்கிருந்து அகற்றப்பட்டிருந்தன. இந்நிலையில் நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெருமளவான ஊடகவியலாளர் குறித்த அறுவருக்கும் மேலதிகமாக 10 பேரின் பதாதைகளுடன் ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்தோடு தேசிய கிருஸ்தவ சபைகளையும் பிரநிதித்துவப்படுத்தும் அருட்தந்தையர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். தற்போதுள்ள ஆட்சியாளர்களுக்கு நாட்டை நிர்வகிக்கக் கூடிய உரிமை இனியும் இல்லை என்பதால் அவர்கள் உடன் பதவி விலக வேண்டும் என்று அருட்தந்தையர்கள் இதன் போது வலியுறுத்தினர்.
அத்தோடு நாடளாவிய ரீதியிலுள்ள அழகுக்கலை நிபுணர்களும் , துறையினரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
அரசாங்கம் பதவி விலகவேண்டும் என்று கோரி கொழும்பு காலிமுகத்திடலில் இடம்பெற்று வரும் போராட்டத்தில் நேற்று(5) மீனவ சங்கப்பிரதிநிதிகள் படகுடன் வந்து ஆதரவு தெரிவித்து அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் இன்று வரை போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை அரசாங்கம் பொருட்படுத்தது செயல்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

