காலிமுகத்திடல் போராட்ட இயக்கத்தை நாடாளுமன்றுக்கு வருமாறு அழைப்பு
காலிமுகத்திடல் போராட்ட இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றி, தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் இதற்கான கோரிக்கையை விடுத்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“காலிமுகத்திடலில் இருந்து போராட்டக்காரர்கள் தாமாகவே வெளியேறி விட்டார்கள். அங்கிருந்த கூடாரங்களும் அகற்றப்பட்டு விட்டன.
ஆனால் காலிமுகத்திடல் என்பது ஒரு இடம்தான். ஒரு ஸ்தலம் தான். அங்கே போராட்டக்காரர்கள் இல்லாததன் காரணமாக போராட்டம் முடிந்து விட்டது என்று அர்த்தம் இல்லை.
போராட்டம் என்பது ஒரு உணர்வு. இந்த உணர்வு போராட்டதாக மாறி வெற்றி அடைந்திருக்கிறது.
இந்தப் போராட்டம் வெற்றி அடைந்ததன் காரணமாகத்தான் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு துரத்தப்பட்டார். மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலகினார். ராஜபக்சர்கள் அமைச்சரவையில் இருந்து ஒதுங்கினர்.
இருந்தாலும் தற்போது திரைமறைவில் ராஜபக்சர்களின் அழுத்தங்கள் இருப்பதாக” அவர் கூறுகிறார்.